தெற்கு பிரான்சில் கொந்தளிக்கும் காட்டுத்தீ தெற்கு பிரான்சில் கொந்தளிக்கும் காட்டுத்தீ 

தெற்கு ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் திருஅவை

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் காரித்தாஸ் அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம், உளவியல் மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்கி வருகின்றன. இப்பேரிடர் மனித குலத்தின் பலவீனத்தையும் படைப்பைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டுவதாக திருஅவை பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பேரழிவை உண்டாக்கும் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு கத்தோலிக்கத் திருஅவை அவசர உதவிகளையும் ஆன்மீகப் பராமரிப்பையும் வழங்கி வருகிறது.

பிரான்ஸின் ஜிரோண்டே பகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 240 வீடுகள் தீக்கிரையாகி அழிந்துள்ளன.

அதேவேளை, ஸ்பெயினில் மாட்ரிட், அவிலா, டோலிடோ மற்றும் காஸ்டெல்லோன் நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உடனடியான பாதிப்புகளில் இருந்து உயிர் பிழைத்திருந்தாலும், பல குடும்பங்கள் இப்போது தங்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளை இழந்து அதிர்ச்சியில் உள்ளனர். இந்தப் பேரழிவு மனித குலத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும், படைப்பைப் பராமரிப்பது குறித்து இறைவா உமக்கே புகழ் (Laudato si') என்ற திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த செய்தியை எதிரொலிக்கிறது என்றும் பிரெஞ்சு ஆயர்கள் பேரவையின் ஒன்றிப்பிற்கான தேசியப் பிரதிநிதியாக பணிசெய்யும் அருள்பணி யான் லெ லே (Fr. Yann Le Lay) கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களின் உடைமைகளை மட்டுமல்லாமல், தங்களின் உரிமையுணர்வையும் சேர்த்தே இழக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயினில், இடப்பெயர்வுக்கு ஆளான பல குடும்பங்கள், குறிப்பாகப் புலம்பெயர்ந்தோர், தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையுடன் வாழ்ந்து வருவதாக கெடாஃபே (Getafe) மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அல்வாரோ டி ஜுவானா (Álvaro de Juana) தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துயரம் மற்றும் அச்சத்தை எதிர்கொண்டு தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவும் வகையில், திருஅவை சமூகங்களும் காரித்தாஸ் (Caritas) அமைப்பும் உணவு, தங்குமிடம், உளவியல் ஆதரவு மற்றும் கருணையுடன் செவிமடுத்தல் ஆகியவற்றை வழங்கி வருகின்றன.

இதற்கிடையில், இந்தக் காட்டுத்தீ நெருக்கடி கிரீஸ் நாட்டிற்கும் பரவியுள்ளது. அங்கு வீசும் பலத்த காற்றால் க்ரீட் (Crete) மற்றும் லெஸ்போஸ் (Lesvos) ஆகிய இடங்களில் தீயின் தீவிரம் அதிகரித்துள்ளது. தீப்பிழம்புகள் தொடர்ந்து வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் ஆலிவ் தோப்புகளை சேதப்படுத்தி வருவதால், மூன்று தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஜூலை 2026, 13:57