காலநிலை நீதிக்கு முன்னுரிமை அளிக்க அயர்லாந்தை வலியுறுத்தும் கிறிஸ்தவ அமைப்புகள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 21 நாடுகளில் உள்ள 3.3 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் 170-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள், ஆறு மாத காலம் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிற்குத் தலைமை வகிக்கும் அயர்லாந்திடம் காலநிலை நீதி மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
"ஐரோப்பாவே, நமது பொதுவான இல்லத்திற்கு உண்மையாக இருப்போம்" (Europe, Be Faithful for Our Common Home) என்ற பரப்புரையின் கீழ் தொடங்கப்பட்ட இந்த வேண்டுகோள், பொருளாதாரப் போட்டி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி அல்லது மனித மாண்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்' (Laudato si') மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) ஆகிய திருத்தூது மடல்களால் ஈர்க்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு, சுற்றுச்சூழல் நெருக்கடியானது நீதி, அமைதி மற்றும் ஏழைகள் மீதான அக்கறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது என்று கூறியுள்ளது.
மேலும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை ஐரோப்பா குறைக்க வேண்டும் என்றும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக படிப்படியாக நிறுத்துதல்; புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் ஈட்டும் அசாதாரண இலாபத்தின் மீது நிரந்தர விண்ட்ஃபால் வரி (Windfall Tax) எனப்படும் எதிர்பாராத அதிக இலாப வரியை விதித்தல்; சூரிய ஒளி, காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க தூய்மையான ஆற்றல் மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீட்டை அதிகரித்தல்; மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த நீண்டகால நிதித் திட்டத்தில் காலநிலை நிதியுதவியை வலுப்படுத்துதல் போன்ற நான்கு முக்கிய நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
அயர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாகும் என்று திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், மக்களையும் இந்த பூமியையும் பாதுகாக்க வேண்டிய அறநெறிப் பொறுப்பு ஐரோப்பாவிற்கு உள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.