வெனிசுலா நிலநடுக்கம்: 14,700 டன் நிவாரண உதவிகளை வழங்கிய காரித்தாஸ்
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
ஜூன் 24 அன்று வடக்கு வெனிசுலாவைத் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நிவாரணப் பணிகள் குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை காரித்தாஸ் வெனிசுலா வெளியிட்டுள்ளது.
ஜூன் 25 முதல் ஜூலை 6 வரை, மொத்தம் 14,700 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் வெனிசுலாவை வந்தடைந்துள்ளன. அவற்றில் 9,000 டன் பொருட்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நிவாரண நடவடிக்கைகளுக்காக 5,700 டன் பொருட்கள் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட நிவாரண உதவிகளில் 73,356 மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள், 8,000 நிவாரணப் பெட்டிகள், 5,000 உணவுப் பொதிகள், 3,000 நலவாழ்வு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 1,000 அவசரகால மீட்பு உதவிப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
நிவாரணப் பொருட்களில் அதிகளவில் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குடிநீராகும். மொத்தம் 4,031 டன் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 3,247 டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 32,000 முதல் 40,000 பேர் வரை முழுமையான மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளனர். மேலும், ஏறத்தாழ 7 இலட்சத்து 30 ஆயிரம் உணவு ரேஷன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள 3,360 பதிவுசெய்யப்பட்ட தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய காரித்தாஸ் வெனிசுலா, தினமும் ஏறத்தாழ 280 தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், போர்ட்டோ ரிக்கோ, சிலி, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக் குழுக்களும் குடிநீர், நலவாழ்வு, ஊட்டச்சத்து, தங்குமிடம் மற்றும் பேரிடர் இடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
கரித்தாஸ் இத்தாலியானா மற்றும் இத்தாலிய ஆயர்கள் பேரவையும் தொடக்க நிதியாக 5 இலட்சம் யூரோக்களை வழங்கி அவசரகால நிவாரண நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து துணைநிற்கின்றன.
நிவாரணப் பொருட்கள் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருவதாக வலியுறுத்திய காரித்தாஸ் வெனிசுலா, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாக மட்டுமே நன்கொடைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதேவேளையில், நீண்டகால மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உலக நாடுகளின் தொடர்ச்சியான ஒற்றுமையும் ஆதரவும் இன்றியமையாதவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.