கர்தினால் தாக்லே கர்தினால் தாக்லே 

இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் உண்மையான நட்பை வளர்க்க அழைப்பு விடுத்த கர்தினால் தாக்லே!

புதிய நற்செய்தி அறிவிப்பிற்கான 12-வது பிலிப்பைன்ஸ் மாநாட்டில் பேசிய கர்தினால் லூயிஸ் அன்டோனியோ தாக்லே அவர்கள், உண்மை, அன்பு, பொறுமை மற்றும் உடன்பயணித்தலை அடிப்படையாகக் கொண்ட உண்மையான நட்பே இயேசுவையும் திருஅவையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் சிறந்த நற்செய்தி அறிவிப்பு வழி என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கத்தோலிக்கர்கள் நற்செய்தி அறிவிப்பிற்கான ஒரு முக்கிய வழியாக உண்மையான நட்பை தழுவிக்கொள்ள வேண்டும் என்றும்,  இது மக்களின் வாழ்வில் இயேசு மற்றும் திருஅவையின் முகத்தை வெளிப்படுத்துகிறது என்றும் கர்தினால் லூயிஸ் அன்டோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.  

ஜூலை 24 அன்று, மணிலாவில் உள்ள பாப்பிறை சான்டோ தோமஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதிய நற்செய்தி அறிவிப்பிற்கான 12-வது பிலிப்பைன்ஸ் மாநாட்டில் (PCNE XII), கர்தினால் தாக்லே அவர்கள் இந்த அழைப்பை விடுத்தார்.

"இதயத்தோடு இதயம்: நட்பும் உடன் பயணித்தலும்" என்ற தலைப்பிலான உரையாடலில் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், உண்மை, அன்பு, பொறுமை மற்றும் உண்மையான உடன்பயணித்தலை அடிப்படையாகக் கொண்ட நட்புறவுகளை வளர்க்குமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உண்மையான நண்பர்கள் ஆறுதல் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அன்போடு உண்மையை எடுத்துரைக்கும் துணிவும் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"இன்று நீங்கள் விதைக்கும் நட்பின் விதைகள் நாளை இறையழைத்தலின் அறுவடையாக மாறும்" என்று  கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், மேலும், கிறிஸ்தவ நட்பு என்பது கடவுளின் அன்பிற்கு பதிலளிக்கும் விதமாக படைப்புகளையும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதையும் உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் தொடக்கத் திருப்பலியில் மறையுரை வழங்கிய மணிலா பேராயர் கர்தினால் ஜோஸ் அட்வின்குலா அவர்கள், பிலிப்பைன்ஸின் கிழக்கு விசாயாஸ் பகுதியில் பேசப்படும் 'வாரே-வாரே' மொழியில் "நட்பு" எனப் பொருள்படும் "சங்கே" என்ற மாநாட்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு உரையாற்றினார்.

நற்செய்தி அறிவிப்பு என்பது பிறரை வற்புறுத்தும் செயலாக அல்ல; மாறாக, பொறுமையுடன் அவர்களோடு உடன்பயணிக்கும் வாழ்வுமுறையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தூய கன்னி மரியாளின் முன்மாதிரியைச் சுட்டிக்காட்டி, உண்மையான நட்பு என்பது காத்திருப்பதும், செவிமடுப்பதும், அன்போடு பிறருடன் இணைந்து நடப்பதுமாகும் என்று எடுத்துரைத்தார்.

மேலும் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நண்பர்கள் என்று அழைக்கிறார் என்றும், அவருடைய பணியில் பங்குபெற அவர்களை அழைக்கிறார் என்றும் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார்.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்ட இம்மாநாடு, கிறிஸ்தவ சீடத்துவத்தின் முக்கிய வெளிப்பாடாகவும், இன்றைய பெருகிவரும் பிளவுபட்ட உலகத்திற்கு ஒரு ஆற்றல் மிக்க பதிலாகவும் நட்பை முன்னிலைப்படுத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூலை 2026, 15:04