'லைம்ஸ் உரையாடல் மற்றும் அமைதிக்கான விருது' பெற்றுக்கொண்ட கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா 'லைம்ஸ் உரையாடல் மற்றும் அமைதிக்கான விருது' பெற்றுக்கொண்ட கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா 

காசா நெருக்கடியில் பரிவு மற்றும் உரையாடல் அவசியம்: கர்தினால் பித்சபாலா

காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்கள், மக்கள் மீதான பரிவு, புரிந்துணர்வு மற்றும் உரையாடலே நிலையான அமைதிக்கான வழி என்று வலியுறுத்தினார். புனித பூமியின் துயரங்களை உலகம் மறந்துவிடாமல், அனைத்துலக சமூகம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இத்தாலியின் பெர்காமோ நகரில் 'லைம்ஸ் உரையாடல் மற்றும் அமைதிக்கான விருது' பெற்றுக்கொண்ட எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்கள்,  "நம்மைப் போல் சிந்திக்காதவர்களிடமும் பரிவு காட்ட வேண்டிய தேவை உள்ளது" என்று வலியுறுத்தினார்.

அண்மையில் காசாவிற்கு மேற்கொண்ட பயணத்தை எடுத்துக்காட்டிய கர்தினால் பித்சபாலா அவர்கள், "காசா ஒரு பேரழிவாக மாறியுள்ளது" என்று கவலை தெரிவித்ததுடன் ரஃபா உட்பட பல நகரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களில், கழிவுநீர் சூழ்ந்த மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் சாக்கடை அருகே விளையாடும் நிலையும், எலிகளின் தொல்லையால் அவர்கள் பாதிக்கப்படுவதும் மிகவும் கவலையளிப்பதாக குறிப்பிட்ட கர்தினால் பித்சபாலா அவர்கள், குழந்தைகளும் தாய்மார்களும் சந்தித்துள்ள மன உளைச்சலுக்கு சிகிச்சையளிக்க மனநல நிபுணர்கள் அவசரமாக தேவைப்படுவதாகவும் வலியுறுத்தினார்.

சில உணவுப் பொருட்கள் மட்டுமே காசாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன; ஆனால் பள்ளி மேசைகள், நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், கண்ணாடி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட தடைகள் நீடிப்பதால் பள்ளிகளை மீண்டும் திறப்பது கடினமாக இருப்பதாக கர்தினால் பித்சபாலா அவர்கள் கூறினார்.

மேற்குக் கரை பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் மீது குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள், நில அபகரிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதையும், அவர்களுக்கு போதிய சட்டப் பாதுகாப்பு இல்லாத நிலையையும் கர்தினால் பித்சபாலா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உரையாடலைக் கைவிடக் கூடாது என்று கூறிய கர்தினால் பித்சபாலா அவர்கள், அக்டோபர் 7 தாக்குதல் இஸ்ரேலியர்களின் மனநிலையை ஆழமாகப் பாதித்திருப்பதோடு, தீவிரவாதக் கருத்துக்கள் சமூகத்தில் வலுப்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இறுதியாக, புனித பூமியின் துயரங்களை உலகம் மறந்துவிடக் கூடாது என்று ஊடகங்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அழைப்பு விடுத்த கர்தினால் பித்சபாலா அவர்கள், "மக்களை தனிமைப்படுத்தாமல், பரிவு, புரிந்துணர்வு மற்றும் உரையாடலின் மூலம் புதிய பாலங்களை அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

02 ஜூலை 2026, 12:32