ஆசியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் கத்தோலிக்கத் திருஅவை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"ஆசியாவின் பரந்த கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார பன்முகத்தன்மைக்கு மத்தியிலும், கத்தோலிக்கர்கள் "ஒரே நம்பிக்கை, கிறிஸ்துவின் ஒரே உடல்" என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்" என்று டோக்கியோ பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கர்தினால் டார்சிசியஸ் இசாவோ கிகுச்சி அவர்கள் கூறியுள்ளார்.
ஜகார்த்தாவில் இடம்பெற்ற 12-வது ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) நிறைவிறுதிப் பேரவையில் இவ்வாறு கூறிய கர்தினால் கிகுச்சி அவர்கள், இந்த பேரவை திருஅவையின் புரிதலை வலுப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரவையில் இடம்பெற்ற அமர்வுகளில், ஆசியா முழுவதிலும் உள்ள ஆயர்கள் செபம், உரையாடல் மற்றும் விவாதங்கள் மூலம் தங்களின் உள்ளூர் திருஅவைகளின் உண்மை நிலைகளை பகிர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்ட கர்தினால் கிகுச்சி அவர்கள், "பிலிப்பைன்ஸ் நாட்டைத் தவிர்த்து, ஏறக்குறைய அனைத்து ஆசிய நாடுகளிலும் கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராக இருப்பதே ஒரு பொதுவான சவாலாக இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
"வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்களைப் பின்பற்றுபவர்கள், ஏழைகள் ஆகியோருடன் உரையாடல் மேற்கொள்வது மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை நிவர்த்தி செய்வது ஆகியவையே திருஅவையின் முக்கியப் பணி" என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
தனது சொந்த நாடான ஜப்பானைப் பற்றிப் பேசுகையில், " அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் 5,00,000-க்கும் குறைவான கத்தோலிக்கர்களையே பதிவு செய்திருந்தாலும், புலம்பெயர்ந்த கத்தோலிக்கர்கள் ஜப்பானில் கத்தோலிக்கர்களின் மக்கள் தொகையை கணிசமாக அதிகரித்துள்ளனர்" என்று கர்தினால் கிகுச்சி அவர்கள் விளக்கியுள்ளார்.
"குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமிய கத்தோலிக்கர்கள், திருஅவையின் பன்முகத்தன்மையை வளப்படுத்துகின்றனர்" என்றும் "பெரும்பாலும் சமூக விலக்கல் மற்றும் தேசியவாதத்தால் குறிக்கப்படும் ஒரு சமூகத்தில், "வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூகம்" என்ற திருஅவையின் சாட்சியம், ஒன்றிணைந்த பயணத்தை மையமாகக் கொண்ட நற்செய்தியின் ஆற்றல் மிக்க அடையாளம்" என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica humanitas) திருத்தூது மடல் குறித்து, ஜப்பானிய ஊடகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளன என்றும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மீது அந்த மடல் கவனம் செலுத்தியுள்ளதே இதற்கு காரணம் என்றும் கர்தினால் கிகுச்சி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.
"இந்த மடலை அதிகாரப்பூர்வமாக ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன" என்றும் "மேலும் அது வெளியிடப்பட்ட பின்னர் அதன் பரவலான தாக்கம் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.