தேடுதல்

கர்தினால் கிரேசியாஸ் கர்தினால் கிரேசியாஸ்  

அமைதிக்கான பாலங்களை உருவாக்க அழைப்பு: ஆசியத் திருஅவைகளுக்கு கர்தினால் கிரேசியாஸ் வேண்டுகோள்

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கத் திருப்பலியில் தலைமையேற்ற கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள், உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் வழியாக ஆசியத் திருஅவைகள் அமைதியை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"ஆசியத் திருஅவைகள் உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் அமைதியை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்" என்று கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 21, செவ்வாயன்று, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதரான கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜகார்த்தாவில் உள்ள முலியா விடுதியில் இடம்பெற்ற தொடக்கத் திருப்பலிக்குத் தலைமை தாங்கிய கர்தினால் கிரேசியாஸ் அவர்கள், ஒன்றிணைந்தப் பயணத்தை (synodality) "உலகிற்கு திருஅவை அளிக்கும் மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று" என்று விவரித்தார், மேலும் மக்களை ஒன்றிணைக்கவும் அமைதிக்கான பாலங்களை உருவாக்கவும் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பாரம்பரிய இந்தோனேசியப் பழக்கவழக்கங்கள், பன்மொழி இறைவேண்டல்கள் மற்றும் கண்டம் முழுவதும் உள்ள நாடுகளின் புனிதர்களைக் கௌரவிக்கும் புனிதர்களின் மன்றாட்டுமாலை ஆகியவற்றின் மூலம் ஆசியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை இந்தத் தொடக்க வழிபாடு பிரதிபலித்தது.

ஆசியா முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தத் தொடக்கத் திருப்பலியில் பங்கேற்றனர். ஹாங்காங்கின் கர்தினால் ஸ்டீபன் சௌ சாவ்-யான் மற்றும் தைமூர்-லெஸ்டேயின் கர்தினால் விர்ஜிலியோ டோ கார்மோ டா சில்வா ஆகியோருடன் இணைந்து கர்தினால் கிரேசியாஸ் அவர்கள் கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினார்.

தனது மறையுரையில், "FABC கூட்டமைப்பு என்பது வெறும் நிறுவன ரீதியான சந்திப்பு மட்டுமல்ல; இது ஆசியத் திருஅவைகள் காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து நற்செய்தியை அறிவிக்கும் தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும்" என்று கர்தினால் கிரேசியாஸ் அவர்கள் கூறினார்.

போர், வன்முறை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் நீடித்த தாக்கம் ஆகியவை மனிதகுலம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், "செவிமடுத்தல், பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகிய ஒருங்கிணைந்த மதிப்புகள் நல்லாட்சியை வலுப்படுத்தவும் ஆசியா முழுவதும் அமைதியை மேம்படுத்தவும் முடியும்" என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக கர்தினால் கிரேசியாஸ் அவர்கள், கண்டம் முழுவதும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைத் தொடர்ந்து உருவாக்க பிரதிநிதிகளை ஊக்குவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூலை 2026, 13:54