கைதிகளுக்கு நீதியும் மாண்பும் கிடைக்க கேமரூன் பேராயர் அழைப்பு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கைதிகளின் மாண்பிற்கு கூடுதல் மதிப்பளிக்க வேண்டும் என்றும், "நாம் கைதிகளை நடத்தும் விதம், கடவுளோடு நமக்கு இருக்கும் உறவின் அளவுகோலாகும்" என்றும் கூறியுள்ள பேராயர் சாமுவேல் கிளெடா அவர்கள் "அவர்களின் துன்பங்களை நாம் புறக்கணிப்பது, கிறிஸ்துவையே புறக்கணிப்பதற்குச் சமம்" என்றும் குறிப்பிட்டுள்ளார் .
ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ஆயரின் அருள்பணி மடலில் கேமரூனின் நீதி மற்றும் சிறைத்துறை அமைப்புகளில் நிலவும் அமைப்புசார்ந்த அநீதிகளை கடுமையாகக் கண்டித்த பேராயர் கிளெடா அவர்கள் "சிறையில் இருந்தேன், நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள்" (மத்தேயு 25:36) என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி "இந்த மடல் சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக அல்ல, மாறாக ஆயர் என்ற முறையில் உள்ள அக்கறை மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடாகவே எழுதப்பட்டது" என்று கூறியுள்ளார்.
காரணமற்ற கைதுகள், ரகசிய தடுப்புக்காவல்கள், தனிமைச் சிறைவாசம், ஊழல் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் தொடர்ச்சியான மீறல்கள் ஆகியவற்றை பேராயர் கிளெடா அவர்கள் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.
கைது செய்வதற்கான ஆணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்டு, காணாமல் போனவர்களின் அவலநிலையை சுட்டிக்காட்டிய பேராயர் கிளெடா அவர்கள், "இவர்களின் குடும்பத்தினர் எவ்வித தகவலும் கிடைக்காமல் வீணாகத் தேடி அலைகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அதிகப்படியான நெரிசல், மோசமான மருத்துவப் பராமரிப்பு, காசநோய் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களின் பரவல் மற்றும் போதிய உணவு இல்லாத நிலை ஆகிய சிறைகளில் நிழலும் மனிதாபிமானமற்ற சூழல் குறித்தும் பேராயர் கிளெடா அவர்கள் விவரித்துள்ளார்.
விசாரணைக் கைதிகளாக மக்களை நீண்ட காலம் அடைத்து வைக்கும் முறையையும் விமர்சித்துள்ள பேராயர் கிளெடா அவர்கள், "பலர் தங்களின் விசாரணைக்கு முன்பே பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவதால், சரியான நேரத்தில் நீதி பெறும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"சிறைச்சாலைகள் கைதிகளின் மறுவாழ்வை ஊக்குவிக்க வேண்டும், மனித மாண்பை மதிக்க வேண்டும் மற்றும் அவர்கள் மீண்டும் சமூகத்தில் வெற்றிகரமாக இணைவதற்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ள பேராயர் கிளெடா அவர்கள், நீதி மற்றும் இரக்கத்தை நிலைநிறுத்துமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பெண்களுக்குப் பெரும்பாலும் அடிப்படை நலவாழ்வுப் பொருட்கள் கிடைப்பதில்லை; அதே சமயம் குழந்தைகளும் சிறுவர்களும் புறக்கணிப்பையும் அத்துமீறலையும் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.