தேடுதல்

பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்டோஃபர் ஸ்ட்ரீட் டே பேரணிக் கூட்டத்திற்குள் மோதிய வாகனம் அகற்றப்படும் காட்சி பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்டோஃபர் ஸ்ட்ரீட் டே பேரணிக் கூட்டத்திற்குள் மோதிய வாகனம் அகற்றப்படும் காட்சி 

பெர்லின் பிரைட் விழா தாக்குதல்: "வெறுப்புக்கு இடமில்லை" – பெர்லின் பேராயர்

ஜெர்மனியின் பெர்லின் பிரைட் விழாவில் இடம்பெற்ற கொடிய வாகனத் தாக்குதலை பெர்லின் பேராயர் ஹெய்னர் கோச் அவர்கள் கடுமையாகக் கண்டித்து, "வெறுப்பு வெற்றிபெறக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் LGBTQI+ எனப்படும் பால்புதுமையினர் சமூகத்தினருக்கு ஆதரவை வெளிப்படுத்த ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் ஊர்வலம் மற்றும் திருவிழாவை "பெர்லின் பிரைட்" என்று அழைக்கின்றனர். உள்ளூரில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே என அழைக்கப்படும் இந்தக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற கொடிய வாகனத் தாக்குதலை பெர்லின் பேராயர் ஹெய்னர் கோச் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் "வெறுப்பு வெற்றிபெறக் கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூலை 25, சனிக்கிழமையன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அதிவேகமாக வந்த ஒரு சிற்றுந்து கூட்டத்திற்குள் புகுந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் ஏறத்தாழ 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள், "சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தில் வெறுப்புக்கும் வன்முறைக்கும் இடமில்லை" என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நபர் 21 வயதான அப்துல் பி. என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தீவிர இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும், அண்மையில்தான் சிறுவர் சீர்திருத்தச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அவர், ஞாயிற்றுக்கிழமையன்று காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் அவர்கள், இந்தத் தாக்குதலை "அருவருப்பான செயல்" என்று கண்டித்ததுடன், இது ஜெர்மனியின் திறந்த மற்றும் சுதந்திரமான சமூகத்தின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முழு கடுமையுடன் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, பெர்லின் மேயர் காய் வாக்னர் அவர்கள், பயங்கரவாதச் செயல்களால் நகரின் அடிப்படை மதிப்புகளையும் வாழ்க்கை முறையையும் ஒருபோதும் சிதைக்க முடியாது என்றும், பெர்லின் தனது ஜனநாயக மற்றும் சுதந்திர விழுமியங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

அண்மைய ஆண்டுகளில் ஜெர்மனியில் நடந்துள்ள தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களில் இந்தத் தாக்குதல் மிக முக்கியமானதாகும். இது தீவிரவாத வன்முறை மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 13:57