அவர் பெயர் மரியா
அருள்பணி சேவியர் டெரன்ஸ்
இயேசு கிறிஸ்துவில் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளே! மரியாவைப் பற்றிய சரியான புரிதலைப் பெறுவதற்கு இரண்டு அடிப்படை அம்சங்கள் அவசியம்.
முதலாவது, உண்மையான விசுவாசம். அதாவது, இறைவன் திருவிவிலியத்தின் வழியாகவும், மரியாவின் வாழ்வின் வழியாகவும் நமக்கு வெளிப்படுத்துகின்ற உண்மைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்.
இரண்டாவது, திருவிவிலியமும் திருஅவையின் மரபும் வெளிப்படுத்துகின்ற மரியாவைப் பற்றிய சரியான போதனையை அறிந்திருப்பது. கடந்த தொடரில் இதைப் பற்றியே சிந்தித்தோம்.
நம்மில் பலருக்கு விசுவாசம் இருக்கிறது. ஆனால் அதோடு சேர்த்து, திருவிவிலியமும் திருஅவையின் மரபும் மரியாவைப் பற்றி என்ன போதிக்கின்றன என்பதையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மரியாவை வெறுமனே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும், மீட்பரைப் பெற்றெடுத்த ஒரு கருவியாகவும் மட்டும் பார்க்கக் கூடாது. அதற்கும் அப்பால், இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற அவர் எவ்வாறு வாழ்ந்தார், எந்தெந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டார், எந்த மனநிலையுடன் அவற்றைக் கடந்தார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்திகளும் மரியாவின் வாழ்க்கையை ஒரு விசுவாசப் போராட்டமாகவே நமக்கு காட்டுகின்றன. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக, அவருக்கு சவால்களற்ற வாழ்க்கை கிடைக்கவில்லை. மாறாக, எண்ணற்ற சோதனைகள், துன்பங்கள், இக்கட்டான சூழ்நிலைகள் ஆகியவற்றின் மத்தியில் அவர் இறைவனின் திருவுளத்திற்கு உண்மையாய் வாழ்ந்தார். எனவே, மரியாவை வெறும் கருவியாக மட்டும் பார்த்தால் அவருடைய வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை இழந்துவிடுவோம். ஆனால், அவரது வாழ்வையும் விசுவாசப் பயணத்தையும் சிந்தித்தால், அவர் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வார்.
மரியா ஒரு தனிநபர் மட்டுமல்ல. அவர் ஏற்கனவே யோசேப்புடன் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கபிரியேல் தூதர் அவரைச் சந்திக்கிறார். அந்த ஒரு நிகழ்விலேயே மரியா நான்கு முக்கியமான உறவுகளை வாழத் தொடங்குகிறார்:
- கபிரியேல் தூதருடன்,
- தந்தையாகிய இறைவனுடன்,
- மனிதராகப் பிறக்கவிருந்த மகனாகிய இறைவனுடன்,
- தூய ஆவியாருடன்.
இந்த நான்கு உறவுகளிலும் மரியா எவ்வாறு பதிலளித்தார்? இறைவனின் வார்த்தையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? தூய ஆவியாரின் செயல்பாட்டிற்கு எவ்வாறு தன்னை ஒப்படைத்தார்? இவற்றை நாம் ஆழமாக சிந்தித்திருக்கிறோமா? அதன் பின்னர், இயேசுவைப் பெற்றெடுத்த நாளிலிருந்து அவரது சிலுவை மரணம் வரை, உயிர்த்தெழுதலுக்குப் பின்னரும், ஆரம்பகால திருஅவையோடும், திருத்தூதர்களோடும் மரியா கொண்டிருந்த உறவை நாம் கவனித்திருக்கிறோமா? இந்த உறவுகளைப் புரிந்துகொள்ளும்போதுதான், இன்று மரியா நம்மோடு எந்த உறவை ஏற்படுத்த விரும்புகிறார் என்பதையும், நாமும் அவரோடு எவ்வாறு உறவாட வேண்டும் என்பதையும் அறிய முடியும்.
உறவுகள் மட்டுமல்ல; நிகழ்வுகளையும் நாம் சிந்திக்க வேண்டும்.
வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மரியா விசுவாசக் கண்ணோட்டத்தோடு அணுகினார். இன்று நாம் சிறிய துன்பங்களுக்கே துவண்டுபோகிறோம். ஆனால் மரியா மிகப்பெரிய துயரங்களையும் விசுவாசத்துடன் எதிர்கொண்டார். யோவான் நற்செய்தி 19:25–27-இல், சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திக்கும்போது, மரியா சிலுவையின் அடியில் உறுதியாக நின்றிருந்தார் என்று வாசிக்கிறோம். அந்தத் துன்பத்தை அவர் எவ்வாறு தாங்கினார்? தனது மகனின் மரணத்தை எவ்வாறு விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டார்? இறப்பைத் தாண்டி உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் எவ்வாறு நிலைத்திருந்தார்? இவற்றை நாம் சிந்தித்திருக்கிறோமா?
அன்புச் சகோதர, சகோதரிகளே!
மரியாவை ஒருபோதும் ஒரு கருவியாக மட்டும் பார்க்கக் கூடாது. திருவிவிலியத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு வார்த்தையும் நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதனால்தான் சிலுவையிலிருந்து இயேசு, "இதோ, உன் தாய்" என்று அன்புச் சீடரிடம் மரியாவை ஒப்படைத்தார். அதனால்தான், திருத்தூதர் பணிகள் 1:14-இல், ஆரம்பகால திருஅவையோடு இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்ட மரியாவைக் காண்கிறோம். இவை அனைத்தும், மரியா வெறும் வரலாற்றுப் பாத்திரம் அல்ல; இன்றும் திருஅவையின் தாயாகவும், நம் விசுவாச வாழ்வின் முன்மாதிரியாகவும் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, மரியாவை அவரது உறவுகளின் வழியாகவும், நிகழ்வுகளின் வழியாகவும், விசுவாசப் பயணத்தின் வழியாகவும் புரிந்துகொள்ள முயல்வோம்.அப்போதுதான், "மரியாவை நாங்கள் நன்றாக அறிவோம்" என்று உண்மையாகச் சொல்ல முடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.