அவர் பெயர் மரியா
அருள்பணி சேவியர் டெரன்ஸ்
அன்புக்குரிய சகோதரர், சகோதரிகளே! அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளே!
"யார் இந்த மரியா?" என்பதையும், "இதோ உன் தாய்" என்று இயேசு ஏன் கூறினார்?" என்பதையும் விவிலியத்தின் வெளிச்சத்தில் சிந்தித்தோம்.
புனித பவுல் தனது திருமுகங்களில், கிறிஸ்துவே திருஅவையின் தலை என்றும், திருஅவை கிறிஸ்துவின் மறையுடல் என்றும் போதிக்கிறார். அந்த மறையுடலில் இணைந்திருக்கும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் உறுப்பினர்கள். எனவே, தலையாகிய கிறிஸ்துவையும், மறையுடலாகிய திருஅவையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இதன் அடிப்படையில், சிலுவையில் இயேசு கூறிய "இதோ உன் தாய்" என்ற வார்த்தை, மரியாவை இயேசுவின் தாயாக மட்டுமல்ல, திருஅவையின் தாயாகவும் நமக்குக் கொடுக்கிறது. எபேசியருக்கு எழுதிய திருமுகம் நான்காம் அதிகாரம் 12ஆம் வசனத்தில், கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டியெழுப்புமாறு புனித பவுல் அழைக்கிறார். மறையுடலின் ஒவ்வொரு உறுப்பினரும் வளரும்போதுதான் திருஅவையும் வளர்ச்சி அடைகிறது.
அப்படிப்பட்ட திருஅவையின் தாயாக இருக்கும் மரியாவை நாம் எப்படி மறக்க முடியும்?
அதனால்தான் கத்தோலிக்க திருஅவை, தொடக்க காலம் முதல் மரியாவை நினைவுகூர்ந்து, அவருக்கு உரிய மதிப்பையும் பக்தியையும் செலுத்தி வருகிறது. தன் பிள்ளைகளாகிய திருஅவையின் உறுப்பினர்கள் ஆன்மீக வளர்ச்சி பெறுவதை ஒரு தாய் போல மரியா மகிழ்ச்சியுடன் காண்கிறார். ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
மரியாவைத் தாயாக ஏற்றுக்கொண்டிருக்கும் நாம், அவரைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கிறோமா?
முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக, உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் மரியாப் பக்தியில் ஈடுபடுகிறோமா? இது மிகவும் முக்கியமான கேள்வி. ஏனெனில், கத்தோலிக்கத் திருஅவை மரியாவுக்குக் கொடுக்கும் மரியாதை, ஒருபோதும் இயேசுவை மறைப்பதற்காக அல்ல; மாறாக, இயேசுவிடம் மக்களை அழைத்துச் செல்லும் பாதையாகவே உள்ளது. எனவே, மரியாப் பக்தி எப்போதும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இயேசுவை புறந்தள்ளி, மரியாவையே மையமாக்கும் எந்த அணுகுமுறையும் திருஅவையின் போதனை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, சிலர் கத்தோலிக்கர்களின் மரியாப் பக்தியை விமர்சிக்கின்றனர். சிலர் அதைத் திருஅவையில் பரவியுள்ள "புற்றுநோய்" என்று கூட கூறுகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் ஏன் எழுகின்றன?
ஒருவேளை, நாமே சில நேரங்களில் மரியாவைப் பற்றிய சரியான இறையியல் புரிதலைப் பெறாமல், உணர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பக்தி முயற்சிகளில் ஈடுபடுவதாலோ? இந்தக் கேள்வியை ஒவ்வொரு கத்தோலிக்கரும் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். மரியாவுக்கான நமது அன்பும், பக்தியும், வணக்கமும் அனைத்தும் திருஅவையின் போதனையின் அடிப்படையில்தானா? அல்லது தனிப்பட்ட உணர்ச்சியின் அடிப்படையில்தானா?
திருஅவை மிகவும் தெளிவாகக் கூறுகிறது: மரியாவைப் பற்றிய பக்தி முயற்சிகள் அனைத்தும், திருஅவையின் வழிகாட்டுதலின்படியும், சரியான இறையியல் புரிதலின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இதையே வலியுறுத்தியுள்ளார். திருஅவையின் மரபில் வந்துள்ள பக்தி முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் தவறான புரிதல்களையும், மிகைப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அழைக்கிறார். காலங்காலமாக திருத்தந்தையர்கள், திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் மரியாவைப் பற்றிய சரியான புரிதலையும், அவருக்குரிய பக்தி வணக்கத்தின் எல்லைகளையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில்தான் நாம் மரியாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மரியா ஆடம்பரத்தின் அடையாளம் அல்ல; எளிமையின் அடையாளம். அவர் தன்னுடைய விருப்பத்தை அல்ல, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றியவர். "இதோ, ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக் 1:38) என்று முழுமையாக இறைவனிடம் தன்னை ஒப்படைத்த நம்பிக்கையின் பெண். அந்த எளிமையான விவிலிய மரியாவை அறிந்து, அவருடைய விசுவாசத்தை நம் வாழ்விலும் பின்பற்றுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.