அவர் பெயர் மரியா அவர் பெயர் மரியா  

அவர் பெயர் மரியா

கடவுள் தேர்ந்தெடுத்தவர்களைத் தமது மீட்புத் திட்டத்தில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தமது நேரத்திலும் முறையிலும் மாட்சிமைப்படுத்துகிறார். அதுபோலவே, அன்னை மரியாவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உயர்த்தப்பட்டவர் என்பதால், அவருக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் நாம் வழங்க வேண்டும்.

மரியாவின் மகத்துவம் – கடவுளின் பார்வையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மாட்சிமை

அருள்பணி சேவியர் டெரன்ஸ்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

மரியாவைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, அவரைப் பற்றிய விவிலிய வசனங்களை வெறும் வரலாற்றுச் செய்திகளாக மட்டும் பார்க்கக் கூடாது. அவற்றின் வழியாக, கடவுள் மரியாவை எவ்வாறு தேர்ந்தெடுத்தார், அவரின் வழியாக நமக்காக என்னென்ன அதிசயங்களைச் செய்தார், மீட்புத் திட்டத்தில் மரியா எந்த அளவுக்கு தியாகம் செய்தார் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான், மரியாவுக்கு கடவுள் அளித்த முக்கியத்துவமும், அதனால் நாமும் அவருக்கு அளிக்க வேண்டிய மதிப்பும் நமக்குத் தெளிவாகும். இன்றைய உலகில் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் (throwaway culture) மனநிலை பரவலாகக் காணப்படுகிறது. அதே மனநிலையோடு மரியாவைப் பார்க்க முடியுமா? "மீட்பர் வேண்டும்; அவரைப் பெற்றுத் தந்த பிறகு மரியாவின் பணி முடிந்துவிட்டது" என்று நினைப்பது சரியா? நிச்சயமாக இல்லை. கடவுள் மரியாவுக்கு அளித்த இடமும், பெருமையும், புகழும் தற்காலிகமானதல்ல. எனவே, விவிலியத்தில் கடவுள் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றிய இந்த 'பயன்படுத்தி விட்டு விலக்கிவிடும்' மனநிலையை நாம் களைந்து, அவர்களுக்கு கடவுள் அளித்த மதிப்பை நாமும் அளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். விவிலியத்தைப் பாருங்கள். கடவுள் தமது பணிக்காக தேர்ந்தெடுத்தவர்களை, தமது விருப்பப்படி, தமது நேரத்தில், தமது முறையில் மாட்சிமைப்படுத்துகிறார். அது நமது விருப்பத்திற்கோ எதிர்பார்ப்பிற்கோ ஏற்ப அல்ல; கடவுளின் திட்டத்திற்கேற்ப.

 தொடக்க நூல் 5:24-ல், "ஏனோக்கு கடவுளோடு நடந்தார்; பின்னர் கடவுள் அவரை எடுத்துக்கொண்டார்" என்று வாசிக்கிறோம். "கடவுளோடு நடந்தார்" என்றால், கடவுளுடன் உடலால் நடந்தார் என்பதல்ல; மாறாக, நீதியுடனும், நேர்மையுடனும், கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதே அதன் பொருள். அந்த விசுவாச வாழ்க்கைக்குக் கடவுள் அளித்த பரிசு என்ன? அவர் மரணத்தைச் சந்திக்காமல் உயிரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இதுவே கடவுளின் பாணி. இதையே எபிரேயர் 11:5-லும் வாசிக்கிறோம். உலகம் பாவத்தால் நிரம்பியிருந்தபோது, புதிய தொடக்கத்தை உருவாக்க கடவுள் நோவாவைத் தேர்ந்தெடுத்தார். நோவாவும் அவரது குடும்பத்தாரும் நேர்மையாக வாழ்ந்ததால், உலக அழிவுக்குப் பிறகு புதிய மனிதகுலத்தின் தொடக்கமாக அவர்களை கடவுள் ஆக்கினார். அவர்களோடு உடன்படிக்கை செய்து, புதிய வரலாற்றை ஆரம்பித்தார். இதுவும் கடவுளின் செயல் முறை. தொடக்க நூல் 12:4-ன்படி, ஆபிரகாமுக்கு 75 வயதில் கடவுள் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின் மகனான ஈசாக்கை அவர் பெற்றது 100 வயதில்; அதாவது 25 ஆண்டுகள் கழித்து.

ஏன் இவ்வளவு காலம் காத்திருக்க வைத்தார்? அது கடவுளின் திட்டம். அந்தக் காலம் முழுவதும் ஆபிரகாமின் விசுவாசம் உறுதியாக இருந்ததா என்பதே முக்கியம். அவரது விசுவாசத்திற்கு இறுதியில் கடவுள் வாக்குறுதியை நிறைவேற்றினார். இன்று நாம் அனைவரும் ஆபிரகாமின் விசுவாசத்தின் பிள்ளைகள் என்று பெருமையுடன் கூறுகிறோம். அதுவே அவருக்குக் கடவுள் அளித்த மாட்சிமை. யோசேப்பு சகோதரர்களால் விற்கப்பட்டார். அடிமையாக வாழ்ந்தார். பொத்திபாரின் மனைவியின் சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். ஆனால் இறுதியில் எகிப்தின் ஆளுநராக உயர்த்தப்பட்டார். கடவுள் விரும்பியிருந்தால், துன்பமின்றி அந்தப் பதவியை வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. துன்பங்களின் வழியாகவே மாட்சிமைக்குக் கொண்டுவந்தார். இதுவே கடவுளின் பாணி. அதேபோல் தாவீது பாவம் செய்தார்; ஆனால் மனந்திரும்பினார். அவரோடு கடவுள் உடன்படிக்கை செய்து, அவரது அரியணை நிலைத்திருக்கும் என்றும், அவரது மரபிலிருந்தே மீட்பர் பிறப்பார் என்றும் வாக்களித்தார். தவறு செய்த ஒருவரை மனந்திரும்புதலின் வழியாக உயர்த்துவது கூட கடவுளின் பாணிதான்.

மோசே வாழ்க்கையும் இதையே உணர்த்துகிறது. 40 ஆண்டுகள் கடினமான பணியில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தினார். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாட்டின் எல்லை வரை மட்டுமே அவரை அழைத்துச் சென்றார். அந்த நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இணைச்சட்டம் 34-ஆம் அதிகாரத்தில், மோசே இறந்தபின் அவரை கடவுளே அடக்கம் செய்ததாக வாசிக்கிறோம். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்றுவரை யாருக்கும் தெரியாது. மக்களின் கண்களிலிருந்து மோசேயை மறைத்த கடவுள், பின்னர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் அவரை மீண்டும் மகிமையோடு வெளிப்படுத்துகிறார். இதுவே கடவுளின் அற்புதமான பாணி. எனவே, அன்பானவர்களே, கடவுள் தேர்ந்தெடுத்தவர்களை அவர் தமது நேரத்திலும் முறையிலும் மாட்சிமைப்படுத்துகிறார். மனித பார்வையால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

மரியே வாழ்க!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூலை 2026, 12:47