தேடுதல்

அவர் பெயர் மரியா அவர் பெயர் மரியா  

அவர் பெயர் மரியா

மரியாவைப் பற்றிய உண்மையை மனிதர்களின் கருத்துக்களால் அல்ல, விவிலியத்தின் வெளிச்சத்தில் அறிந்துகொள்ள வேண்டும். கடவுளின் மீட்புத் திட்டத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை உணரும்போது, அவரைப் பற்றிய உண்மையான புரிதல் நமக்குக் கிடைக்கும்.

மரியா கடவுளால் முன்குறிக்கப்பட்டவரா? அல்லது மனிதரால் மிகைப்படுத்தப்பட்டவரா?

இயேசு கிறிஸ்துவில் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளே! "அவர் பெயர் மரியா" என்ற இந்தத் தொடர் வழியாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

"மரியா" என்ற பெயரைக் கேட்டவுடன், கிறிஸ்தவர்கள் மத்தியில் பலவிதமான எதிர்வினைகள் உருவாகின்றன. சிலர், குறிப்பாக கத்தோலிக்க திருஅவையில் உள்ளவர்கள், அன்னை மரியாவை நினைத்தவுடனேயே உணர்ச்சிப்பூர்வமாக, "என் தாய் என்னுடன் இருக்கிறார்" என்ற ஆழமான நம்பிக்கையைப் பெறுகின்றனர். இன்னும் சிலர், "மரியா கத்தோலிக்க திருஅவையின் ஓர் அடையாளம்" என்று மட்டும் கருதி அத்துடன் நிறுத்திக் கொள்கின்றனர். வேறு சிலர், "மரியா உண்மையில் அவ்வளவு முக்கியமானவரா?" என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். கத்தோலிக்க திருஅவையைத் தாண்டி மற்ற கிறிஸ்தவ சபைகளிலும் மரியாவைப் பற்றிய பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன. சிலர் அவரை மதிப்புடன் ஏற்றுக்கொள்கிறார்கள்; சிலர் அவரைப் புறக்கணிக்க வேண்டியவர் என்றும் கருதுகின்றனர். ஆனால், கிறிஸ்தவத்திற்கு வெளியேயும் அன்னை மரியாவுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள மரியன்னையின் திருத்தலங்களும், அவருக்காகக் கொண்டாடப்படும் திருவிழாக்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.

இப்போது ஒரு முக்கியமான கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

விவிலியத்தில் ஆதாம், ஏவாள், நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது என எண்ணற்ற மனிதர்களை கடவுள் தமது மீட்புத் திட்டத்தில் பயன்படுத்தினார். அவர்களை நாம் அனைவரும் மதிக்கிறோம்; நம் விசுவாசத்தின் முன்மாதிரிகளாக ஏற்றுக்கொள்கிறோம். அப்படியானால், புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில் கடவுள் தேர்ந்தெடுத்த மரியாவைப் பற்றிய இவ்வளவு கருத்து வேறுபாடுகள் ஏன்? ஏன் அவரைப் பற்றிய அணுகுமுறைகள் இவ்வளவு மாறுபடுகின்றன?

இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

இன்று பெரும்பாலானோர் மரியாவைப் பற்றி பேசும்போது, விவிலியத்தின் அடிப்படையில் அல்ல; தங்களது விருப்பு–வெறுப்புகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கிறார்கள். தாங்கள் நினைப்பதே உண்மை என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அதன் விளைவாக, விவாதங்களும் விதண்டாவாதங்களும் அதிகரிக்கின்றன. ஆனால், நாம் விவிலியத்தின் அடிப்படையில் மரியாவை ஆராய்வதில் தவறிவிட்டோம். சிலருக்கு எப்படி ஆராய வேண்டும் என்பதே தெரியவில்லை. இன்னும் சிலர் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே அவரை அணுகுகிறார்கள். உணர்ச்சி தவறல்ல; ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல.

எனவே, விவாதங்களையும் கருத்து மோதல்களையும் தாண்டி, விவிலியம் மரியாவைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான், கடவுள் விரும்பும் உண்மையான புரிதலை நாம் பெற முடியும்.

இதற்கு நாம் விவிலியத்தை வாசிக்கும் முறையையே மாற்ற வேண்டும்.

நாம் விவிலியத்தை வெறும் வரலாற்று நூலாக வாசிக்கிறோமா? அல்லது மனித மீட்பின் வரலாற்றில் கடவுள் எவ்வாறு செயல்பட்டார் என்பதை அறியும் நூலாக வாசிக்கிறோமா? நாம் கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், இந்த மீட்பின் வரலாற்றில் கடவுள் யாரை யாரைத் தேர்ந்தெடுத்தார்? ஏன் தேர்ந்தெடுத்தார்? அவர்கள் எந்த சூழலில் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்? சந்தேகத்தோடா? தயக்கத்தோடா? துன்பங்களோடா? சவால்களோடா? அல்லது முழுமையான நம்பிக்கையோடா? அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் கடவுளுடைய திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே, இனிமேல் விவிலியத்தை வாசிக்கும் போது, அதனை வெறும் தகவல்களின் தொகுப்பாகவோ, வரலாற்றுச் சம்பவங்களின் பதிவாகவோ பார்க்காமல், மனிதர்மீது கடவுள் கொண்ட அன்பும், அவரது மீட்புத் திட்டமும் வெளிப்படும் நிகழ்வுகளின் தொடராகப் பார்க்க வேண்டும். அப்போதுதான், விவிலியத்தில் வரும் ஒவ்வொரு மனிதரும் கடவுளுடைய திட்டத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதும், அவர்கள் அனைவரும் நம் மீட்பின் வரலாற்றில் மறக்க முடியாத பங்கு வகித்தவர்கள் என்பதும் நமக்குப் புரியும். இந்த உண்மையை உணர்ந்தால்தான், அவர்களிடம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்வோம்.

இந்தச் சூழலில், திருவள்ளுவர் கூறும் ஒரு திருக்குறளை நினைவுகூர விரும்புகிறேன்:

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
(திருக்குறள் – 110)

எந்தத் தவறையும் செய்தவருக்கு மீட்சிக்கான வாய்ப்பு இருக்கலாம்; ஆனால் தனக்குச் செய்யப்பட்ட நன்றியை மறந்தவருக்கு மீட்சி இல்லை என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். அதேபோல, கடவுள் தமது மீட்புத் திட்டத்தில் பயன்படுத்திய விவிலிய மாந்தர்களின் பங்களிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. கடவுள் அவர்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை நாமும் உணர வேண்டும். அதுவே கடவுளுடைய விருப்பம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஜூலை 2026, 13:06