தேடுதல்

குவாம் விடுதலை நாள் திருப்பலி குவாம் விடுதலை நாள் திருப்பலி 

கிறிஸ்துவின் உயிர்ப்பே மனிதத் துன்பங்களுக்கு இறைவனின் உன்னதமான பதில்!

குவாம் விடுதலை பெற்றதன் 82ஆம் ஆண்டு நினைவு திருப்பலியில் உரையாற்றிய நியூசிலாந்திற்கான திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் காபோர் பிண்டர் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்பே மனிதத் துன்பங்களுக்கு இறைவனின் உன்னதமான பதில் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

சிலுவையின் வெளிப்படையான தோல்வியை கிறிஸ்துவின் உயிர்ப்பு வெற்றியாக மாற்றியதன் மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பே மனிதத் துன்பங்களுக்குக் கடவுளின் உச்சகட்டப் பதில் என்று நியூசிலாந்திற்கான திருத்தந்தையின் அரசுத் தூதரும், பசிபிக் பகுதிக்கான திருத்தந்தையின் பிரதிநிதியுமான பேராயர் காபோர் பிண்டர் அவர்கள் கூறினார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து குவாம் விடுதலை பெற்றதன் 82ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ஜூலை 21ஆம் நாள் ஹகத்னாவில் அமைந்துள்ள டல்ஸ் நோம்ப்ரே டி மரியா பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது பேராயர் காபோர் பிண்டர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

அகானா உயர்மறைமாவட்டப் பேராயர் ரியான் பி. ஜிமெனெஸ் மற்றும் அங்குள்ள அருள்பணியாளர்களுடன் இணைந்து திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் காபோர் பிண்டர் அவர்கள், குவாம் மக்களுக்காகவும், குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் துயர அனுபவங்களையும் நினைவுகளையும் இன்னும் சுமந்து வாழும் போரில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆன்மீக நெருக்கத்தையும் இறைவேண்டல்களையும் தெரிவித்தார்.

1941ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 1944ஆம் ஆண்டு ஜூலை 21 வரை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் குவாம் மக்கள் அனுபவித்த துயரங்களை நினைவுகூர்ந்த திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் காபோர் பிண்டர் அவர்கள், போரின்போது துன்புற்று உயிரிழந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தினார்.

குடிமை மற்றும் இராணுவத் தலைவர்கள் உட்பட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், வன்முறைக்குப் பதிலாக அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் உரையாடலை முன்னிறுத்துமாறு திருத்தந்தை அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தக் கொண்டாட்டத்தை ஒற்றுமையின் ஆற்றல் மிக்க அடையாளமாக விவரித்த பேராயர் ஜிமெனெஸ் அவர்கள், சுதந்திரத்திற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவும், போர்க்கால தியாகங்களை மதிக்கவும், நீடித்த அமைதிக்காக செபிக்கவும், குவாமை கடவுளின் பராமரிப்பில் ஒப்படைக்கவும் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் இந்தத் திருப்பலி ஒன்றிணைத்துள்ளது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூலை 2026, 13:48