தேடுதல்

அருள்பணி ஜாக் ஹேமேல் அவர்களின் ஓவியப் படம் அருள்பணி ஜாக் ஹேமேல் அவர்களின் ஓவியப் படம் 

அருள்பணி ஜாக் ஹேமேல் படுகொலை: சமய நல்லுறவின் அவசியத்தை நினைவூட்டிய தியாகம்

அருள்பணி ஜாக் ஹேமேல் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரான்சில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் கிறிஸ்தவ–முஸ்லிம் நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையை எடுத்துக்காட்டியதாக டொமினிக்கன் அருள்பணி ஜான்-பிரான்சுவா பூர் அவர்கள் தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

2016 ஜூலை 26 அன்று, வடக்கு பிரான்சின் செயின்ட்-எத்தியென்-து-ரூவ்ரே பங்கின் பங்குக்குருவான அருள்பணி ஜாக் ஹேமல், திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, தங்களை "இஸ்லாமிய அரசு" (ISIS) அமைப்புடன் தொடர்புபடுத்திக்கொண்ட இரு தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் திருப்பலியில் பங்கேற்றிருந்த ஒருவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிகழ்வின் 10ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, பிரான்சில் சமய நல்லுறவுக் கூட்டங்கள், கண்காட்சிகள், செபவழிபாடுகள் மற்றும் பிரெஞ்சு ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் ஜான்-மார்க் அவ்லின் அவர்களின் தலைமையில் நினைவுத் திருப்பலி உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வத்திக்கான் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலொன்றில், பிரெஞ்சு ஆயர்கள் பேரவையின் முஸ்லிம்களுடனான உறவுகளுக்கான தேசியப் பணியின் இயக்குநரான டொமினிக்கன் அருள்பணி ஜான்-பிரான்சுவா பூர் அவர்கள், அருள்பணி ஜாக் அமேலின் படுகொலை, கிறிஸ்தவ–முஸ்லிம் நல்லுறவு மற்றும் உரையாடலை மேலும் ஆழப்படுத்த வேண்டிய தேவையை உணர்த்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.

2001ஆம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல்களும், அருள்பணி ஹேமேலின் படுகொலையும் சமய நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அருள்பணி ஹேமேலின் படுகொலையைத் தொடர்ந்து, பல முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கொடூரச் செயலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், திருஅவையுடன் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி, அருள்பணி ஹேமேலின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இத்தகைய வன்முறைக்கு இஸ்லாமிய சமயத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

இளம் தலைமுறையினர் இந்த நிகழ்வை மறந்துவிடாமல் நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும், வன்முறையை நியாயப்படுத்துவதற்கு சமயம் ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அருள்பணி பூர் அவர்கள் வலியுறுத்தினார். அச்சம், அவநம்பிக்கை மற்றும் தற்காப்பு மனப்பான்மை ஆகியவை சமயங்களுக்கு இடையேயான உரையாடலை பலவீனப்படுத்துகின்றன என்றும் அவர் எச்சரித்தார்.

இறுதியாக, மன்னிப்பு, நல்லிணக்கம் மற்றும் உரையாடல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திருஅவையின் பதில் இன்றும் வலிமையான சாட்சியாகத் திகழ்கிறது என்றும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், ஒத்துழைப்பு மற்றும் நிலையான அமைதிக்காகத் தங்களின் அர்ப்பணிப்பை மேலும் புதுப்பிக்க வேண்டும் என்றும் அருள்பணி ஜான்-பிரான்சுவா பூர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூலை 2026, 13:12