தேடுதல்

பேராயர் ஃபுல்டன் ஜே பேராயர் ஃபுல்டன் ஜே 

பேராயர் ஃபுல்டன் ஷீனின் அருளாளர் பட்டமளிப்பை முன்னிட்டு உலக மறைப்பணி செபமாலை முயற்சி

பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் அவர்களின் அருளாளர் பட்டமளிப்பை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள திருத்தந்தை மறைத்தூதுக் கழகம் உலக மறைப்பணி செபமாலையைச் செபிக்க கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

அமெரிக்காவில் உள்ள திருத்தந்தை மறைத்தூதுக் கழகம், பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் அவர்களின் அருளாளர் பட்டமளிப்பு நிகழ்வுக்குத் தயாராகும் வகையில், நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களை உலக மறைப்பணி செபமாலையைச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் தலைமை தாங்கும் அருளாளர் அறிவிப்புத் திருப்பலி இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று மிசோரியின் புனித லூயிஸில் கொண்டாடப்படும்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள துறவற சபைகள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் திருப்பயணிகளுக்காக 75,000 மறைப்பணி செபமாலைகளைத் தயாரித்து வருகின்றனர்.

திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் தேசிய இயக்குநரான பேரருள்திரு ரோஜர் ஜே. லாண்ட்ரி அவர்கள், இந்த முயற்சியை "நம்பிக்கை மற்றும் மறைப்பணி அர்ப்பணிப்பின் ஆற்றல்மிக்க வெளிப்பாடு" என்று விவரித்தார்.

மேலும் 1977 ஆம் ஆண்டு இந்தியானாவின் கோகோமோவில் உள்ள ஏழை கிளாரியர் மடாலயத்திற்கு பேராயர் ஷீன் அவர்கள் மேற்கொண்ட வருகையின் ஆண்டு நிறைவான மே 13 அன்று இந்த செபமாலை தயாரிக்கும் பணி தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

1951 ஆம் ஆண்டு பேராயர் ஷீன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக மறைப்பணி செபமாலை, ஐந்து கண்டங்களைக் குறிக்கும் ஐந்து வண்ணங்கள் மூலம் திருஅவையின் உலகளாவிய பணியைச் சித்தரிக்கிறது: பச்சை (ஆப்பிரிக்கா), நீலம் (ஓசியானியா), வெள்ளை (ஐரோப்பா), சிவப்பு (அமெரிக்கா) மற்றும் மஞ்சள் (ஆசியா).

20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அமெரிக்க கத்தோலிக்க தலைவர்களில் ஒருவரான பேராயர் ஷீன் அவர்கள், 2012 இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் வணக்கத்திற்குரியவராக அறிவிக்கப்பட்டார். மேலும் 2019 இல் அவரது பரிந்துரையால் நிகழ்ந்த அதிசயத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்தைத் தொடர்ந்து பேராயர் ஷீன் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

பீதேஸ் செய்தி நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 13:04