தேடுதல்

விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

வெளிப்புற வழிபாடுகளை விட, மனமாற்றமும் நேர்மையான வாழ்வும் இறைவனுக்குப் பிரியமான காணிக்கையாகும். தம் வழியைச் செம்மைப்படுத்தி இறைவனின் திருவுளத்தின்படி வாழ்பவர்களே அவரது மீட்பை அனுபவிப்பார்கள்.

திபா 50 : 8 - 9, 16 - 17, 21, 23

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.

அருள்பணி. பால்ராஜ்

இன்று “தினம் ஒரு திருப்பாடல்” நிகழ்ச்சியில் நாம் திருப்பாடல் 50 பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

 “தம் வழியை செம்மைப்படுத்துவோர் என் மீட்பை கண்டடைவர்.”

இந்த திருப்பாடல் நமக்கு கூறும் முக்கிய செய்தி என்னவென்றால், நாம் நேர்மையாகவும், உண்மையாகவும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது மீட்பு உறுதி பெறும் என்பதே ஆகும். இந்த திருப்பாடலின் ஆசிரியர் ஆசாப் (Asaph) என்று கருதப்படுகிறார். தாவீது மன்னர் அமைத்த சங்கீதப் பணியாளர்களில் ஒருவராக இருந்த இவர், பல திருப்பாடல்களை எழுதியுள்ளார். இந்த திருப்பாடல் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது:
கடவுளின் மக்கள் சிலர் வெளிப்படையாக அவரை புகழ்ந்தாலும், உள்ளத்தில் அவரிடமிருந்து விலகி வாழ்கின்றனர். மேலும் பலர் சடங்குகள், காணிக்கைகள் மற்றும் வெளிப்புற வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்; ஆனால் வாழ்க்கை மாற்றத்தை மறந்து விடுகிறார்கள். இன்றைய காலத்திலும் இது பொருந்தும். நாம் திருப்பலியில் பங்கேற்கலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், பல பக்தி செயல்களை செய்யலாம். ஆனால் அவை அனைத்தும் நமது வாழ்க்கையை மாற்றவில்லை என்றால் அவை முழுமையற்றதாகவே இருக்கும்.

கடவுள் நம்மிடமிருந்து விரும்புவது பணம் அல்லது காணிக்கை அல்ல; மாறாக, நேர்மையான இதயம், மனம் நொறுங்கிய உள்ளம் மற்றும் மாற்றம் பெற்ற வாழ்க்கை தான். ஆகவே இந்த திருப்பாடல் நம்மை சிந்திக்க அழைக்கிறது: நான் வெளிப்படையாக மட்டுமே பக்தியா? என் வாழ்க்கை உண்மையில் மாற்றமடைந்ததா?  நான் கடவுளோடு உண்மையான உறவில் வாழ்கிறேனா?  இப்போது நாம் நமது வாழ்க்கையை சீர்திருத்திக் கொண்டு கடவுளுக்கு நம்மையே காணிக்கையாக ஒப்படைப்போம்.

செபம்:

அன்பின் பரலோக பிதாவே, இந்த நாளுக்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம். வெளிப்புற சடங்குகளில் மட்டும் மூழ்கி, உம்முடன் உள்ள உறவை மறந்த எங்களை மன்னித்தருளும். உண்மையான மனம் நொறுங்கிய இதயத்தையும், நேர்மையான வாழ்க்கையையும் எங்களுக்கு தாரும். நாங்கள் உமக்கு உகந்த வாழ்க்கை வாழ அருள் புரிவீராக. ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூன் 2026, 12:04