விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்கு உண்மையான நன்றி செலுத்துவது, அவரது திருவுளத்தின்படி வாழ்வதில்தான் உள்ளது. பொறுமையுடன் இறைவனை நம்பி காத்திருப்போர், அவரது வழிநடத்தலையும் அருளையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

அருட்பணி. டினாட்டோ ஜோசப்

திபா 40 : 1, 4, 6 - 9

உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!

இறையேசுவில் பிரியமான சகோதரர் சகோதரிகளே,

உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

இன்று நாம் திருப்பாடல் 40-ஐ தியானிக்க இருக்கிறோம். இது கடவுளின் நன்மைகளுக்காக அவரைப் புகழ்ந்து பாடும் ஒரு அழகிய புகழ்ச்சிப் பாடலாகும். திருப்பாடல்கள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் 41 திருப்பாடல்கள் முதல் தொகுதியாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், திருப்பாடல் 40 முதல் தொகுதியின் இறுதிப் பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய திருப்பாடலான 39-ஆம் திருப்பாடல், துயரங்களையும் வேதனைகளையும் இறைவனிடம் எடுத்துரைக்கும் மன்றாட்டுப் பாடலாக உள்ளது. அதேபோல், திருப்பாடல் 40-இன் சில பகுதிகளும் இறைவனிடம் மன்றாடும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால், தனது துயரங்களின் மத்தியிலும் திருப்பாடலாசிரியர் கடவுளைப் புகழவும், அவருக்கு நன்றி செலுத்தவும் மறப்பதில்லை. இதுவே இந்தப் பாடலின் சிறப்பாகும். இந்தத் திருப்பாடலின் பின்னணியைப் பார்க்கும்போது, தாவீது அரசர் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இறைவனை நாடியிருப்பதை உணர முடிகிறது. அத்தகைய சூழலிலும், “ஆண்டவர் என்னை இதுவரை காத்து வழிநடத்தினார்” என்ற நம்பிக்கையுடன் அவர் இறைவனைப் புகழ்கிறார்.

“நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என் மன்றாட்டிற்குச் செவிசாய்த்தார்” என்ற வார்த்தைகளோடு இந்தத் திருப்பாடல் தொடங்குகிறது. இதன் மூலம், பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இறைவனை நாடுகிறவர்களின் செபத்திற்கு அவர் நிச்சயமாக பதிலளிப்பார் என்ற உண்மையை திருப்பாடலாசிரியர் எடுத்துரைக்கிறார். இந்தத் திருப்பாடல் வெறும் நன்றிப் பாடல் மட்டுமல்ல. இறைவனுக்குச் செலுத்தும் நன்றி நம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது. இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்காக வார்த்தைகளால் மட்டும் நன்றி கூறுவது போதாது; அந்த நன்றியை நம் வாழ்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதனால்தான் திருப்பாடலாசிரியர், “இதோ, நான் வருகின்றேன்; உமது திருவுளத்தை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றேன்” என்று கூறுகிறார். இறைவனின் திருவுளத்தின்படி வாழ்வதே உண்மையான நன்றியுணர்வு என்பதை இந்தப் பாடல் நமக்குக் கற்றுத்தருகிறது. எனவே, நாம் எத்தகைய சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும், எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், இறைவன் நம்மை இதுவரை வழிநடத்தியுள்ளார் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம். இனியும் அவர் நம்மை வழிநடத்துவார் என்ற உறுதியுடன் அவரைப் போற்றி மகிழ்வோம்.

அன்பின் ஆண்டவரே, இதுவரை எங்கள் வாழ்வில் உமது வல்லமையான கரத்தால் எங்களை வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் தேவைகளையும், எங்கள் வாழ்வின் நெருக்கடிகளையும் நீர் அறிந்தவராய் இருக்கின்றீர். அவற்றையெல்லாம் கடந்து செல்ல எங்களுக்கு வலிமையும் அருளும் தந்தருளும். உமது திருவுளத்தின்படி வாழ்ந்து, எங்கள் நன்றியை எங்கள் செயல்களின் வழியாக வெளிப்படுத்தும் மக்களாக எங்களை மாற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூன் 2026, 15:04