விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்கள்

அன்னாவின் பாடல், கடவுளின் அரசு ஏழைகளையும் எளியோரையும் உயர்த்தி, துன்புறுவோருக்கு நம்பிக்கை அளிக்கும் அரசாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே, நாமும் கடவுளின் அரசுக்குரிய மக்களாக அன்பு, நீதி, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வாழ்வில் வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
  • 1 சாமு 2 : 1, 4 - 8
  • ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!

அருட்பணி. டினாட்டோ ஜோசப்

இன்று நாம் சிந்திக்கவிருக்கும் இறைவார்த்தைப் பகுதி, முதல் சாமுவேல் நூலில் இடம்பெறும் அன்னாவின் புகழ்ப்பாடலாகும். திருவழிபாட்டில் நாம் திருப்பாடல்களைத் தியானிப்பது வழக்கம். சில நேரங்களில், விவிலியத்தில் இடம்பெறும் தனிப்பட்ட புகழ்ப்பாடல்களையும் நாம் சிந்திப்போம். அவ்வகையில், இன்று நாம் தியானிக்கப்போகும் பாடல், சாமுவேலின் தாயாரான அன்னா பாடிய நன்றிப் பாடலாகும்.

“ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கிறது” என்று தொடங்கும் இந்தப் பாடல், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியா பாடிய “என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது என்ற அன்னை மரியாளின் இறைப்புகழ் பாடலை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த இரு பாடல்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் கடவுளின் அருளால் பெற்ற குழந்தைக்காக நன்றி கூறி, இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

அன்னா, நீண்ட காலம் குழந்தைப் பேறு இல்லாமல் துன்புற்றார். இறைவனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார். அவரது ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர், அவருக்கு சாமுவேல் என்ற மகனை அருளினார். அந்த மகனை கடவுளுக்கே அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்குக் கொண்டு வந்தபோது, அவர் இந்த நன்றிப் பாடலைப் பாடினார்.

அன்னாவும் அன்னை மரியாவும் பெற்றெடுத்த குழந்தைகள் இருவரும் மக்களுக்கு புதியதொரு காலத்தைத் தொடங்கியவர்கள். சாமுவேலின் வழியாக இஸ்ரயேலில் அரசாட்சி உருவானது. இயேசு கிறிஸ்துவின் வழியாக கடவுளின் அரசு உலகிற்கு வெளிப்பட்டது.

அன்னாவின் பாடல், கடவுளின் அரசின் பண்புகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவர் வலியோரின் பெருமையைத் தாழ்த்தி, ஏழைகளையும் எளியோரையும் உயர்த்துகிறார். துன்புறுவோருக்கு இரக்கம் காட்டுகிறார். இந்தப் பாடல், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து அவருக்கு நன்றி செலுத்த நம்மை அழைக்கிறது.

விவிலிய அறிஞர்கள் கூறுவதுபோல், இந்தப் பாடல் அன்னாவின் தனிப்பட்ட நன்றிப் பாடல் மட்டுமல்ல; கடவுளின் விடுதலையையும் அவரது அரசின் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கும் இஸ்ரயேல் மக்களின் பாடலாகவும் பார்க்கப்படுகிறது. நாமும் கடவுளின் அரசுக்குரிய மக்களாக வாழ்ந்து, அன்பு, நீதி, இரக்கம் மற்றும் ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்துவோமாக.

செபம்

அன்பின் ஆண்டவரே, எங்கள் வாழ்வின் அரசராக இருந்து எங்களை வழிநடத்துகின்றீரே; அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது அரசுக்குரிய மக்களாக வாழவும், உமது அன்பையும் இரக்கத்தையும் பிறரிடம் எடுத்துச் செல்லவும் எங்களுக்கு அருள் தாரும். உமது அரசின் மதிப்புகளை எங்கள் வாழ்வால் சாட்சியமாக வெளிப்படுத்த எங்களை வழிநடத்தும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 12:58