விவிலியத் தேடல்
அருட்பணி. மரிய பெனிட்டோ
திபா 116 : 12 - 14, 17 - 19
ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
இயேசுவுக்குள் பிரியமான இறைமக்களே, இந்தத் திருப்பாடல் தியானத்தின் வழியாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் நம்மைப் பாதுகாத்து வழிநடத்தும்படி, இன்றைய நாளில் திருப்பாடல் 116-ஐ நாம் தியானிப்போம்.
இத்திருப்பாடலின் ஆசிரியர், தான் சந்தித்த எதிரிகளின் சூழ்ச்சி, கொடிய நோய் அல்லது ஏதேனும் ஒரு துன்பமான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்து, விடுதலை தந்த இறைவனுக்கு நன்றியறிதலோடு இந்தத் திருப்பாடலை எழுதியுள்ளார். துன்பத்திலிருந்து தன்னைக் காத்த இறைவனுக்கு, மக்கள் முன்னிலையில் அவர் செலுத்தும் நன்றியையும், பொருத்தனைகளையும் இது விவரிக்கிறது. இன்று நாம் குறிப்பாக இறைவசனங்கள் 12 முதல் 19 வரை தியானிக்கவிருக்கிறோம்.
ஆண்டவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?
“ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்றொரு பெரிய கேள்வியை ஆசிரியர் எழுப்புகிறார். நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இறைவன் செய்த சகல கிருபைகளையும் நினைத்துப் பார்த்தால், நம் வாழ்நாள் முழுவதுமே நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகாது என்ற உன்னத உண்மையை இந்த வார்த்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
மீட்பின் கிண்ணமும் சிலுவை தியாகமும்
ஆசிரியர், “மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய பெயரைத் தொழுதிடுவேன்” என்கிறார். அன்பிற்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் தன்னையே தியாகப் பலியாக, நம் பாவங்களைப் போக்கும் நன்றிப் பலியாகப் பரலோகத் தந்தைக்குச் செலுத்தினார். எனவே, நாமும் ஒவ்வொரு நாள் திருப்பலியிலும், நம் உடல், உள்ளம், ஆன்மா அனைத்தின் வழியாகவும் இறைவனுக்கு மீட்பின் கிண்ணத்தை ஏந்தி நன்றிப் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சாட்சிய வாழ்வின் வல்லமை
“ஆண்டவருக்கு நான் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை அவருடைய மக்கள் அனைவருக்கும் முன்னிலையில் நிறைவேற்றுவேன்” என்று எருசலேம் தேவாலயத்தில் மக்கள் முன்பாகத் தான் செய்யவிருக்கும் நன்றியறிதலைப் பிரகடனம் செய்கிறார். ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை மக்கள் முன்னிலையில் நாம் 'சாட்சியாகப்' பகிரும்போது, விசுவாசம் இல்லாத மக்களும் ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ள அது ஒரு நல்வாய்ப்பாக அமையும். நம்முடைய ஆலயங்களில் ஆராதனை வேளையிலோ, திருப்பலியிலோ ஒரு சகோதரரோ, சகோதரியோ சாட்சி சொல்லும்போது, "அவர்களுக்குச் செய்த ஆண்டவர் எனக்கும் நிச்சயம் செய்வார்" என்ற நம்பிக்கை பிறரைத் தொற்றிக்கொள்கிறது அல்லவா? இதையே ஆண்டவரும் விரும்புகிறார்.
இயேசுவின் பெயரால் ஆசீர்வாதம்
இறைவனுடைய திருப்பெயர் எல்லாப் பெயர்களையும் விட மேலானது, வலிமை மிக்கது. யோவான் நற்செய்தியில் இயேசு, “நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் நான் அதை உங்களுக்குத் தருவேன்” என்று வாக்குக் கொடுத்துள்ளார். தூய பவுலடியாரும், எல்லாப் புகழ்ச்சியையும் பலிகளையும் இயேசுவின் பெயரால் தந்தைக்குக் காணிக்கையாக்கச் சொல்கிறார்.
வசனம் 19-இல், “உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்” என்ற வரிகளுக்கேற்ப, நாம் ஒவ்வொரு நாளும் இறைவனுக்குத் துதி, கன, மகிமையைச் செலுத்துவோம். நோய் நொடிகள், சிறையிருப்பு, சாத்தானின் சூழ்ச்சிகள், ஆபத்துகள் என எல்லாவற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாத்து வரும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் அடி எடுத்து வைத்துள்ள இந்த ஆண்டு முழுவதும் ஆண்டவர் நம்மைக் காத்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு இத்திருப்பாடலைத் தொடர்ந்து தியானிப்போம்.
ஜெபம்
எங்கள் மனதின் ஆழத்திலிருந்து வருகிற நன்றியையும், வாயின் புகழ்ச்சிப் பலிகளையும், பாடல்கள் மற்றும் இறைவார்த்தைகள் வழியாக உமக்குக் காணிக்கையாக்குகிறோம். நீர் எங்களுக்குச் செய்த உன்னத செயல்களுக்காக மக்கள் முன்னிலையில் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
உமது ஆசீர்வாதம் என்றும் எங்களோடு தங்கியிருப்பதாக. நீர் இதுவரை செய்து வந்த நன்மைகளுக்காகவும், இனிமேல் செய்யப் போகிற ஒவ்வொரு நற்காரியங்களுக்காகவும் உமக்குக் கோடான கோடி நன்றிகள். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமம் வழியாய் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்