தேடுதல்

புனித அந்தோணியார் புனித அந்தோணியார் 

இன்றைய புனிதர்

புனித பதுவா அந்தோணியார், இறைவார்த்தை அறிவிப்பிலும் பணிவான சேவையிலும் சிறந்து விளங்கி, எண்ணற்ற மக்களை இறைவனிடம் வழிநடத்தியவர். இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்த அவரைப் போல, நாமும் விசுவாசத்திலும் ஜெபத்திலும் உறுதியாக நிலைத்திருப்போம்.

புனித அந்தோணியார்

திரு. பிலோமி அலெக்ஸ்      

புனித அந்தோணியார் கி.பி. 1195-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள், போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் (Lisbon) நகரில் ஒரு வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் மார்ட்டின் - மேரி (மேரி திவ்யா) ஆவர். இவருக்குப் பெற்றோர் இட்ட இயற்பெயர் பெர்னாண்டோ மார்ட்டின் டி புல்ஹோயஸ் (Fernando Martins de Bulhões) என்பதாகும். இவர் சிறு வயது முதலே இறைபக்தியிலும் நற்குணங்களிலும் சிறந்து விளங்கினார். தன் 15-வது வயதில் லிஸ்பனில் உள்ள புனித அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்தார். பின்னர், குருமட அதிபரின் அனுமதியோடு கோயம்பத்தூர் (Coimbra) திருச்சிலுவை குருமடத்திற்கு மாறி, அங்குத் தீவிரமாக இறைவார்த்தையைக் கற்றுக்கொண்டார். குருத்துவப் பட்டம்: படிப்பை முடித்து, கி.பி. 1219-ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் குருவாக திருப்பொழிவு பெற்றார்.

கி.பி. 1219-ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற ஐந்து பிரான்சிஸ்கன் துறவிகள், அங்குள்ள மன்னரால் தலை வெட்டப்பட்டு மறைசாட்சிகளாக உயிர்நீத்தனர். இதையறிந்த அருட்தந்தை பெர்னாண்டோ, தானும் ஆண்டவருக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொண்டார். இதன் காரணமாக, கி.பி. 1220-1221 ஆம் ஆண்டில் அவர் அகுஸ்தினார் சபையிலிருந்து விலகி, பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார். அங்கேயே தன் பெயரை 'அந்தோணியார்' என்று மாற்றிக்கொண்டார். தற்செயலாக ஒரு குருத்துவ விழாவில், "கிறிஸ்து சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்தவர் ஆனார்" என்ற தலைப்பில் அந்தோணியார் ஆற்றிய முதல் மறையுரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அன்றிலிருந்து அவர் சிறந்த போதகராகவும், மறையுரையாளராகவும் பிரசித்தி பெற்றார். இவருடைய அறிவையும் பக்தியையும் கண்டு வியந்த புனித பிரான்சிஸ் அசிசியார், இவரைப் பிரான்சிஸ்கன் குருமடத்தின் முதல் இறையியல் பேராசிரியராக நியமித்தார். கி.பி. 1226-ஆம் ஆண்டு வட இத்தாலியில் உள்ள பிரான்சிஸ்கன் சபையின் மாநிலத் தலைவராகப் (Provincial) பொறுப்பேற்றுத் தன் பணிகளைத் திறம்படச் செய்தார்.

புதுமைகளும் விண்ணகப் பேறும்

அந்தோணியார் வாழ்ந்த காலத்திலேயே அவரது பரிந்துரை ஜெபத்தின் மூலமாக எண்ணற்ற புதுமைகள் நடந்தன. நற்கருணை ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவருக்கு, குழந்தை இயேசுவே நேரில் தோன்றி, இவரது கரத்தில் அமர்ந்து கொஞ்சி விளையாடினார். தொடர் உழைப்பாலும் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்ட அருட்தந்தை அந்தோணியார், கி.பி. 1231-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் நாள் தன் 36-வது வயதில் இத்தாலியின் பதுவா (Padua) நகருக்கு அருகில் விண்ணகம் அடைந்தார். இவருடைய மறைவிற்குப் பின், இவருடைய கல்லறையில் நடந்த புதுமைகளைக் கண்டு, கி.பி. 1232-ஆம் ஆண்டு மே 31-ஆம் நாள் (அவர் இறந்த 11 மாதங்களிலேயே) திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி (Pope Gregory IX) இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். 1946-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் நாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் (Pope Pius XII), இவரைத் திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புனித அந்தோணியார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், இறைவார்த்தையைப் போதித்த அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இன்றும் இத்தாலியின் பதுவா திருத்தலத்தில் புதுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 13 அன்று திருவிழா காணும் புதுமைகளின் புனிதரான பதுவா அந்தோணியாரிடம் நமது தேவைகளை ஒப்படைத்து, உருக்கமாய் ஜெபிப்போம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 14:30