தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

அன்பும் இரக்கமும் அவசியமானவை; ஆனால் யாரை நம் வாழ்விலும் இல்லத்திலும் அனுமதிக்கிறோம் என்பதில் விவேகமும் தேவை. நல்லாதனார் எச்சரிப்பதுபோல், தீய குணமுடையோரின் செல்வாக்கிலிருந்து விலகி, நல்லவர்களின் நட்பைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே நன்மை தரும் பாதையாகும்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

அன்புடையவர்களே, திரிகடுகம் தொடரில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும்.

இன்று நாம் திரிகடுகத்தின் மூன்றாம் செய்யுளின் மூன்றாவது கருத்தைப் பற்றி சிந்திக்கிறோம். அந்தச் செய்யுள் கூறுவது:

“இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் இம்மூன்றும்
அறியாமையால் வரும் கேடு.”

அறியாமையால் மனிதனுக்கு ஏற்படும் கேடுகளில் ஒன்றாக, சிறுமைத்தனம் கொண்டவர்களையும் தீய குணமுடையவர்களையும் தன் இல்லத்திற்குள் அழைத்துவருவதை நல்லாதனார் குறிப்பிடுகிறார். இங்கு “சிறியார்” என்பது பொருளாதார ஏழ்மையைக் குறிப்பதல்ல. மாறாக, உயர்ந்த பண்புகளும் நல்லொழுக்கமும் இல்லாதவர்களைக் குறிக்கிறது. கயமை, வஞ்சகம், தீய எண்ணம் போன்ற குணங்களைக் கொண்டவர்களை நம்பி வீட்டிற்குள் அல்லது நெருங்கிய உறவிற்குள் அனுமதிப்பது பல்வேறு துன்பங்களுக்கும் காரணமாக அமையும். தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் மிக உயர்ந்த அறமாகக் கருதப்படுகிறது. “வந்தாரை வாழவைக்கும்” பண்பு தமிழரின் பெருமையாகும். ஆனால் அந்தப் பெருந்தன்மையைத் தவறாகப் பயன்படுத்துவோரிடத்தில் விழிப்புணர்வும் அவசியம். அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் யாரை நம் வாழ்வின் நெருக்கமான வட்டத்திற்குள் அனுமதிக்கிறோம் என்பதிலும் விவேகம் தேவை.

இதற்கு விவிலியத்தில் ஒரு எடுத்துக்காட்டைக் காணலாம். திருமுழுக்கு யோவானின் மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வில், ஏரோதின் ஆசை, ஏரோதியாளின் பழிவாங்கும் மனம், சலோமியின் அறியாமை ஆகிய மூன்றும் காரணங்களாக இருந்தன. சலோமி சரியான ஆலோசனையை நாடாமல், தீய நோக்கம் கொண்ட தன் தாயின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால் பெரிய தீமை நிகழ்ந்தது. தவறான நபர்களின் செல்வாக்கு எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அதனால்தான் திருவள்ளுவரும் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். உயர்ந்த குணமுடையவர்கள் தீயவர்களின் நட்பிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் விவேகம் இல்லாதவர்கள் அவர்களை நெருக்கமாக அனுமதித்து துன்பத்தை வரவேற்கிறார்கள். எனவே, எல்லா மனிதர்களும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்; அனைவருக்கும் மனமாற்றம் பெறும் வாய்ப்பு உண்டு. இருப்பினும், ஒருவர் மனமாற்றம் அடையாத நிலையில் இருக்கும்போது அவரின் தீய குணங்களைப் பொருட்படுத்தாமல் நெருக்கமான இடம் கொடுப்பது நமக்கும் பிறருக்கும் கேட்டை உண்டாக்கலாம்.

இந்தச் செய்யுளின் மூலம் நல்லாதனார் நமக்கு மூன்று அறியாமைக் கேடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்:

  1. கல்வி அறிவும் நல்லறிவும் இல்லாதவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டுதல்.
  2. தனக்கு வாழ்க்கைத்துணையாக வந்த மனைவியைத் துன்புறுத்துதல்.
  3. சிறுமைத்தனமும் தீய குணங்களும் கொண்டவர்களை இல்லத்திற்குள் அழைத்து வருதல்.

இந்த மூன்றும் அறியாமையால் ஏற்படும் கேடுகள் என அவர் எச்சரிக்கிறார்.

எனவே நாம் விழிப்புணர்வுடன் வாழ்வோம். யாருடன் நட்பு கொள்கிறோம், யாருக்கு நம் வாழ்க்கையில் இடம் கொடுக்கிறோம் என்பதை ஆராய்ந்து செயல்படுவோம். அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக இருந்தாலும், விவேகத்தையும் இழக்காமல் வாழ்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூன் 2026, 11:37