திருத்தந்தையின் ‘மகத்தான மனிதநேயம்’ திருத்தூது மடல் குறித்து தமிழில் இணையவழிக் கருத்தரங்கு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான மகத்தான மனிதநேயம் (Magnifica Humanitas) குறித்த இணையவழிக் கருத்தரங்கு ஜூன் 13, சனிக்கிழமை அன்று இடம்பெற்றது. தமிழ் மொழியில் இடம்பெற்ற இந்த நிகழ்வை வத்திக்கானின் இறையியல் கல்விக்கழகத்தின் தமிழ் இறையியல் மன்றம், கத்தோலிக் கோஷண்ட் (Catholic Quotient) மற்றும் யெஸ்னி பிரேஸ் (Yesni Prays) ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்த திருஅவையின் போதனைகளைப் பற்றி தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.
பாப்பிறை இறையியல் கழகத்தின் பேராயர் அந்தோனியோ ஸ்டாக்லியானோ அவர்கள் தனது செய்தியில், 'மகத்தான மனிதநேயம் ' திருத்தூது மடலை, மனிதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மையத்தில் வைக்கும் ஒரு காலத்திற்கேற்ற இறைவாக்கு அழைப்பு என்று விவரித்தார். மேலும் இந்தத் திருத்தூது மடலைப் படித்து, அதன் செய்தியைப் பரவலாகப் பகிருமாறும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.
இந்த இணையவழிக் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய சேலம் மறைமாவட்டத்தின் ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள், திருஅவையின் போதனைகளைத் தனிப்பட்ட, திருஅவை சார்ந்த மற்றும் மேய்ப்புப்பணி வாழ்க்கையில் பொறுப்புடனும் திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
உரோமையில் உள்ள மரியானம் பாப்பிறை இறையியல் துறையின் தலைவர் அருள்பணி டெனிஸ் குழந்தைசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் கத்தோலிக் கோஷண்ட் மற்றும் யெஸ்னி பிரேஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி இயேசு கருணாநிதி அவர்கள், திருத்தூது மடலின் முக்கிய கருப்பொருள்கள் குறித்தும் திருஅவைக்கும் தற்போதைய சமூகத்திற்கும் அதன் பொருத்தப்பாடு குறித்தும் விளக்கினார்.
மேலும் கருத்துரை வழங்கிய கார்மல் மேரி மற்றும் அருள்பணி ரிச்சி வின்சென்ட் ஆகியோர், தகவல் தொடர்பு, கிறிஸ்தவ உருவாக்கம், அறநெறி சார்ந்த தெளிவு மற்றும் நற்செய்தி அறிவிப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை எடுத்துரைத்தனர்.
பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எண்ணிம தளங்களில் கத்தோலிக்க திருஅவையின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பங்கேற்பாளர்கள், மேலும் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக மறைமாவட்ட மற்றும் ஆயர் பேரவை அளவிலான முயற்சிகளையும் முன்மொழிந்தனர்.
இந்தக் கருத்தரங்கில் இந்தியா, இலங்கை, மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து 156 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.