மனித வர்த்தகத்தை தடுக்க ஒன்றிணைந்த தலித்தா கும் தலைவர்கள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 24 முதல் 30 வரை, பாங்காக் அருகிலுள்ள பான் ஃபூ வான் அருள்பணி பயிற்சி மையத்தில் ஆறாவது பன்னாட்டு தலித்தா கும் தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. 23 நாடுகளைச் சேர்ந்த 30 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தப் பயிற்சியை, தலித்தா கும் இன்டர்நேஷனல் மற்றும் அனைத்துலக துறவறச் சபைத் தலைவர்களின் ஒன்றியம் (UISG) இணைந்து ஏற்பாடு செய்தன. மனித வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்தில் கல்வி, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.
உலகளாவிய மதிப்பீடுகளின்படி, கட்டாய உழைப்பு மற்றும் கட்டாயத் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் ஏறத்தாழ 4.96 கோடி மக்கள் நவீன அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணையதள மோசடி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படும் குற்றவியல் வலைப்பின்னல்களால் உருவாகி வரும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
தாய்லாந்தின் தலித்தா கும் வடிவமைத்துள்ள "என்னைத் தொடாதே" என்ற புதுமையான பாடத்திட்டம் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. அருள்சகோதரி மேரி-ஆக்னஸ் சுவர்ணா புசாப் SPC, என்பவரால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்துப் பாடங்களிலும் மனித வர்த்தக தடுப்புக் கல்வியை ஒருங்கிணைத்து, குழந்தைகளைப் பாதுகாக்க ஆசிரியர்களையும் சமூகங்களையும் வலுப்படுத்துகிறது.
ஜூலை 5, வெள்ளிக்கிழமை, தாய்லாந்தின் சமூக மேம்பாடு மற்றும் மனிதப் பாதுகாப்பு அமைச்சகம், இத்திட்டத்தில் பங்கேற்ற பள்ளிகளை "முன்மாதிரியான கல்வி நிறுவனங்கள்" என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
தலித்தா கும் அமைப்பின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி அபி அவெலினோ அவர்கள், இந்த முயற்சியை உலகளவில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாக விவரித்ததுடன், "கல்விதான் மனித வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வலிமையான கருவி" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பங்கேற்பாளர்கள் எண்ணிம கடத்தல் சவால்களை ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்குச் சேவை செய்யும் நல்லாயன் அருள்சகோதரிகள் மையத்தையும் பார்வையிட்டனர். இது தலைமைத்துவப் பயிற்சியை நடைமுறை மேய்ப்புப்பணி அணுகுமுறையுடன் இணைத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.