ஞாயிறு மறையுரைச் சிந்தனை
பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு
கிறிஸ்துவில் அன்பிற்குரியவர்களே,
பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிற்றுக்கிழமையை நாம் கொண்டாடுகின்றோம். இன்றைய இறைவார்த்தை நமக்கு, "ஆண்டவர் வலிமைமிக்க வீரரைப் போல நம்மோடு இருக்கிறார்." என்ற ஒரு பெரிய நம்பிக்கையையும் உறுதியையும் வழங்குகிறது. மனித வாழ்க்கையில் பலவிதமான பயங்கள் உள்ளன. சிலர் பூச்சி, பல்லி, பாம்பு போன்றவற்றைக் கண்டு பயப்படுகிறார்கள். சிலர் தனிமை, இருள், நோய் அல்லது மரணம் குறித்து அச்சப்படுகிறார்கள். இன்னும் சிலர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். "நாளை என்ன ஆகுமோ?" என்ற பயம் அவர்களை ஆட்கொள்கிறது. ஒரு சுவையான நிகழ்வு இதை நினைவூட்டுகிறது. ஒரு பங்கில், மதுபோதையில் ஒருவர் வந்து பங்குத்தந்தையிடம் கோபமாகப் பேசினார். எவ்வளவு கூறினாலும் அவர் அங்கிருந்து செல்லவில்லை. இறுதியில் பங்குத்தந்தை அவரது மனைவியை அழைத்தார். மனைவி அங்கு வந்ததும், சத்தமாக "இங்கே என்ன நடக்கிறது?" என்று கேட்டார். உடனே கோபமாகப் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதர் அமைதியாகி, எதுவும் நடக்காதது போல அங்கிருந்து சென்றுவிட்டார். வெளியே புலி போல இருந்தவர், மனைவியைப் பார்த்ததும் பயந்துவிட்டார்!
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பயம் இருக்கிறது. ஆனால் இறைவன் என் வலிமையான கரத்தினால் உன்னைத் தாங்குகின்றேன் என்று கூறுகிறார். இந்த வாக்குறுதி நமக்கு நம்பிக்கையளிக்கிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்கிறார். அவர் நன்மை செய்தபோதும் மக்கள் அவரை எதிர்த்தனர். இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. ஏனெனில், "ஆண்டவர் வலிமைமிக்க வீரரைப் போல என்னோடு இருக்கிறார்" என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அன்பிற்குரியவர்களே, நாம் நன்மை செய்யும்போது எதிர்ப்புகளும் சோதனைகளும் வரலாம். ஆனால் அவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. எரேமியாவைப் போல நாம் கூற வேண்டும்:
"ஆண்டவரே, என் வழக்கை உம்மிடம் ஒப்படைக்கிறேன்."
இது விசுவாசத்தின் செபம். நமது பிரச்சினைகள், துன்பங்கள், கவலைகள் அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைக்கும் மனப்பான்மை நமக்கு வேண்டும்.
நற்செய்தியில் இயேசு கூறுகிறார்:
"இரண்டு சிட்டுக்குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுகின்றன அல்லவா? அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றி கீழே விழாது."
மேலும்,"உங்கள் தலைமுடிகள் கூட எண்ணப்பட்டுள்ளன."
இதன் மூலம் இறைவன் நம்மை எவ்வளவு அன்போடும் அக்கறையோடும் கவனித்துக் கொள்கிறார் என்பதை உணரலாம். அவருடைய அனுமதியின்றி எதுவும் நம் வாழ்க்கையில் நடக்காது.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் வாழ்க்கை இதற்குச் சிறந்த உதாரணம். அவரது சகோதரர்கள் பொறாமையால் அவரை அடிமையாக விற்றனர். பல துன்பங்களை அவர் அனுபவித்தார். ஆனால் ஆண்டவர்மீது நம்பிக்கை இழக்கவில்லை. இறுதியில் அதே யோசேப்பை ஆண்டவர் எகிப்தின் ஆளுநராக உயர்த்தினார். நாம் சந்திக்கும் சோதனைகளும் துன்பங்களும் நிரந்தரமானவை அல்ல. அவற்றை ஆண்டவரிடம் ஒப்படைத்தால், அவர் அவற்றை ஆசீர்வாதங்களாக மாற்றுவார். எனவே, அன்பானவர்களே, நன்மை செய்யும்போது வரும் எதிர்ப்புகளையும் சோதனைகளையும் கண்டு கலங்காமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போம். "ஆண்டவர் வலிமைமிக்க வீரரைப் போல என்னோடு இருக்கிறார்" என்ற நம்பிக்கையோடு வாழ்வோம். நமது எல்லா கவலைகளையும் அவரிடம் ஒப்படைத்து, அவரது பாதுகாப்பிலும் அன்பிலும் நிலைத்திருப்போம்.
ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்தட்டும். ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.