திருத்தந்தை திருத்தந்தை   (@Vatican Media)

ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

திருவுடல், திருஇரத்தப் பெருவிழா நமக்கு இறைவனின் எல்லையற்ற அன்பையும் தியாகத்தையும் நினைவூட்டுகிறது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இயேசு கிறிஸ்து நமக்காக விட்டுச் சென்ற அரிய பெரிய கொடைகளிலே, மாபெரும் கொடையாகக் கருதப்படும் இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் திருநாமத்திலே என் அன்பான வாழ்த்துகளும், வணக்கங்களும், செபங்களும் உரித்தாகுக!

1. உறவை புதுப்பிக்கும் தாயின் பாசம் (உவமை)

இறைவனுக்குப் பிரியமானவர்களே, ஒரு தாய்க்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்தத் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் அருமையாக வளர்ந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, உலகக் காரியங்களில் மூழ்கியதால் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகளும், பொறாமையும் ஏற்பட்டன. இதனால், அவர்கள் ஒருவர் மற்றவரோடு பேசாமல் பல நாட்கள் பகைமையோடு இருந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் அந்தத் தாய் குறுக்கிட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை மீண்டும் பேச வைத்து, நல்லதொரு பாதையில் வழிநடத்தி வந்தார். இது ஒருமுறை அல்ல, அவர்கள் பெரியவர்கள் ஆன பின்பும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. மகன்கள் பேசாமல் இருக்கும்போதெல்லாம் தாய் அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தினார். ஆனால், அந்தத் தாயின் மனதில் ஒரு பெரிய பாரம் இருந்தது. "நான் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, என் பிள்ளைகள் சண்டையிட்டுப் பேசாமல் இருந்தால், இவர்களை யார் சமாதானப்படுத்துவார்? யார் இவர்களது உறவை புதுப்பித்துக் கொடுப்பார்?" என்று சிந்தித்தாள்.

அவள் தனக்கு முதிர்ந்த வயது வந்தபோது, ஒரு நாள் சுவையான உணவைத் தயாரித்து தன் புதல்வர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு உணவைப் பரிமாறும் முன்பாக, அவர்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோளை வைக்கிறாள்: "அன்புக் குழந்தைகளே, நீங்கள் தொடர்ந்து இப்படிச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். நான் இருக்கும் வரை உங்களைச் சேர்த்து வைக்கிறேன். நான் இல்லாதபோது நீங்கள் எவ்வாறு ஒன்றாக இணையப் போகிறீர்கள் என்று என் மனம் வேதனைப்படுகிறது. எனவே, எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. இனிமேல் நீங்கள் எப்பொழுதெல்லாம் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் இந்த உணவைத் தயாரித்து, ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும். இந்த பந்தியில் நீங்கள் அமரும்போதெல்லாம் என்னை நினைவுகூர்ந்து, 'நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும், ஒருவர் மற்றவரை மன்னித்துச் சமாதானத்தோடு வாழ வேண்டும் என்று அம்மா நம்மிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டாள்' என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த நினைவோடு நீங்கள் உணவை உண்ணும்போது, உங்கள் உறவு புதுப்பிக்கப்படும்." அந்தத் தாயின் மறைவுக்குப் பின்பும், அவளது பிள்ளைகள் அந்தப் பந்தியைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தங்களுக்குள் இருந்த பிணக்குகளை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

2. நற்கருணை: இயேசுவின் நிரந்தரப் பிரசன்னம்

என் அன்பான சகோதர சகோதரிகளே, இதே போன்ற ஒரு நிகழ்வுதான் நம்முடைய திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் பின்னணியிலும் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தான் இந்த உலகை விட்டுப் பிரிந்த பின்பு தன் சீடர்கள் கவலையிலும் கண்ணீரிலும் மூழ்கிவிடுவார்கள் என்பதை அறிந்தார். "இயேசு இல்லையே, இனி நாம் என்ன செய்வோம்? நம் பழைய மீன்பிடிக்கும் தொழிலுக்கே சென்றுவிடுவோமா?" என்று அவர்கள் சோர்ந்து போவார்கள் என்பதை உணர்ந்தார். எனவேதான், அவர் தனது மரணத்திற்கு முந்தைய இரா விருந்தின்போது, அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, அதைத் தன் சீடர்களுக்காகத் தன் உடலாகவும் இரத்தமாகவும் தந்து: "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று கட்டளையிட்டார். "நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, இந்த இரசத்தைப் பருகும்போதெல்லாம் என்னை நினைவுகூருங்கள். நான் உங்களுக்கு என்னென்ன போதித்தேனோ, என்னென்ன அற்புதங்களைச் செய்தேனோ, அவற்றை நினைத்துப் பார்த்து என் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ளுங்கள்" என்று கூறி, இந்த மாபெரும் நற்கருணை விருந்தை நமக்கு ஒப்படைத்திருக்கிறார். அன்புக்குரியவர்களே, அன்பு செய்யவும், ஒப்புரவாகிச் சமாதானம் ஆகவும், பிறரை மதிக்கவும், உடைந்த உறவுகளுக்கும் ஆன்மாவிற்கும் புத்துயிர் கொடுக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் உடனிருப்பை நாம் என்றும் உணரவுமே இந்த நற்கருணை ஏற்படுத்தப்பட்டது.

3. இரத்தத்தைக் கொடுப்பது உயிரைக் கொடுப்பதற்குச் சமம்

ஒருவர் தன் உடலையும் இரத்தத்தையும் கொடுப்பது என்பது, தன் உயிரையே கொடுப்பதற்குச் சமமாகும். இதைக் விளக்கும் ஒரு நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம்: ஒரு குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் ஒரு மகனும், மகளும் இருந்தார்கள். அவர்கள் ஒருமுறை சுற்றுலா சென்றுவிட்டு, மலைப்பாத வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் குடும்பத்தினர் அனைவரும் பலத்த காயமடைந்தனர். குறிப்பாக, அந்தச் சிறுமிக்கு அதிகக் காயம் ஏற்பட்டு, உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவிட்டது. அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுமிக்கு, உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது. அவளுடைய சகோதரனான அந்தச் சிறுவனின் இரத்த வகை அவளுக்குப் பொருத்தியது. மருத்துவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, "தம்பி, உன் அக்காவுக்கு உயிர் பிழைக்க இரத்தம் தேவைப்படுகிறது, உன்னால் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். அந்தச் சிறுவன் ஒரு நிமிடம் சிந்தித்தான். பிறகு தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, "சரிங்க டாக்டர், என் இரத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினான். இரத்தம் செலுத்தப்பட்ட பின்பு அவனது சகோதரி காப்பாற்றப்பட்டாள். ஆனால், இரத்தம் கொடுத்து முடித்த பின்பும் அந்தச் சிறுவன் கண்களை மூடியே படுத்திருந்தான். மருத்துவர் அவனிடம் வந்து, "தம்பி, இரத்தம் கொடுத்து முடித்துவிட்டோம், உன் சகோதரி பிழைத்துக் கொண்டாள். நீ கண்களைத் திறந்து எழுந்திருக்கலாம்" என்றார். அந்தச் சிறுவன் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து, "டாக்டர், நான் இன்னும் இறக்கவில்லையா?" என்று கேட்டான். மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை. "நீ ஏன் இறக்க வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான்: "நான் சிறுவயதில் என் நண்பர்கள் பேசிக்கொண்ட போது கேட்டிருக்கிறேன். நம் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறினால் நாம் இறந்துவிடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள். அதனால்தான், என் அக்காவுக்கு இரத்தம் கொடுத்தபோது, என் உயிரையே அவளுக்குக் கொடுக்கிறேன் என்று நினைத்து என் கண்களை மூடிக்கொண்டேன்." அன்பானவர்களே! அந்தச் சிறுவன் தன் இரத்தத்தைக் கொடுத்தபோது தன் உயிரையே கொடுக்கத் துணிந்தான். அதைப்போலத்தான், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் நமக்காகத் தன் இரத்தத்தைச் சிந்தியபோது, தன் உயிரையே நமக்காகக் கையளித்தார். அதைத்தான் நாம் இந்த நற்கருணையில் நினைவுகூருகிறோம்.

4. ஏன் இயேசு தன் உயிரைத் தர வேண்டும்?

"அனைத்தையும் படைத்த மாட்சிமை மிக்க கடவுள், நம்மை வேறு ஏதேனும் ஒரு வழியில் மீட்டிருக்கலாமே? ஏன் அவரே மனிதனாக வந்து, தன் உயிரைக் கொடுத்து நம்மை மீட்க வேண்டும்?" என்ற கேள்வி நம்மிடம் எழலாம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மக்களின் பாவப்பரிகாரத்திற்காக 'பலியாடு' (Scapegoat) என்ற வழக்கம் இருந்தது. பாவமன்னிப்புப் பெற வேண்டிய மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி, அந்தப் பலியாட்டின் தலைமீது சுமத்துவது போலச் சடங்கு செய்து, அதை ஆளரவமற்ற பாலைவனத்திற்குள் துரத்திவிடுவார்கள். அந்த ஆடு காடுகளில் அலைந்து மடியும். ஆனால் புதிய ஏற்பாட்டில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உலகத்தின் பாவங்களைப் போக்கும் தூய செம்மறியாக, பலியாடாக மாறினார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் தன்மீது சுமந்து, சிலுவையில் ரத்தம் சிந்தி, நம் பாவங்களைக் கழுவி, நம்மை மீண்டும் இறைவனின் பிள்ளைகளாக மீட்டெடுத்தார். இதுவே இந்தத் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் மாபெரும் தத்துவமாகும். இயேசுவின் இரத்தம் நம் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

5. பழைய ஏற்பாட்டு நிழலும், புதிய ஏற்பாட்டு நிஜமும்

பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களை எகிப்து மன்னன் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்க ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்: "நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை உங்கள் வீட்டு வாசற்படிகளில் பூசுங்கள். சங்காரத் தூதர் கடந்து செல்லும்போது, எந்த வீட்டில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்டிருக்கிறதோ, அந்த வீட்டைத் தீங்கு செய்யாமல் கடந்து போவார்." மோசே கூறியபடியே இஸ்ரயேல் மக்கள் செய்ய, அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களைப் பாதுகாத்தது. பழைய ஏற்பாட்டின் ஆட்டுக்குட்டி இரத்தம் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்தது என்றால், புதிய ஏற்பாட்டில், உண்மைச் செம்மறியான இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தம் நம்மை எத்துணை அதிகமாகப் பாதுகாக்கும்! சிலுவையில் நமக்காக அர்ச்சிக்கப்பட்ட அந்த இரத்தம், இவ்வுலகின் தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும், மாயைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்ற மாபெரும் கேடயமாக இருக்கிறது. இயேசுவின் திருவுடல் நமது ஆன்மாவிற்குப் புத்துயிர் அளிக்கும் உன்னத உணவாக இருக்கிறது. ஒரு நல்லாயன் தன் ஆடுகளுக்கு உணவளித்துக் காப்பது போல, இயேசு தன் உடலையே உணவாகத் தந்து நம் ஆன்மாவைக் காக்கிறார். இந்த மாண்புமிக்க திருவுடலையும் இரத்தத்தையும்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும் பெறுகிறோம்.

6. நற்கருணையில் நாம் அனைவரும் ஒன்றே

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அழகாகக் குறிப்பிடுகிறார்: "நாம் போற்றிப் புகழும் ஆசிவழங்குக் கிண்ணத்தில் பருகுகிறோம் அல்லவா? அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! நாம் அப்பத்தைப் பிட்டுண்ணுகிறோம் அல்லவா? அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்" (1 கொரிந்தியர் 10:16-17).

இதையே நாம் ஒரு அழகான பாடலாகவும் பாடுகிறோம்:

"இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா? என் உடலை தின்று, என் குருதி அருந்தித் திருந்த மாட்டாயா? என் குருதி அருந்தி, என்னைப் போல வாழ மாட்டாயா?"

இந்த மாண்புமிகு நற்கருணையைப் பெறும்போது இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்: "ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த அப்பத்தை உட்கொள்ளும்போதும், என் இரத்தத்தில் பங்குகொள்ளும்போதும், நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் வாழ வேண்டும்."

7. நம்முடைய தயாரிப்பு எவ்வாறு உள்ளது?

இப்படிப்பட்ட உன்னதமான இயேசுவின் திருவுடலையும் இரத்தத்தையும் நாம் எவ்வாறு பெறுகிறோம்? தகுந்த ஆன்மீகத் தயாரிப்புடன் பெறுகின்றோமா? திருப்பலியில் பங்குகொள்ளும்போது, இது எனக்காக, என் மீட்புக்காக, என் பாதுகாப்பிற்காக, என் ஆன்ம பலத்திற்காகக் கொடுக்கப்படும் இறைவனின் கொடை என்பதை உணர்கிறோமா? சற்றுச் சிந்திப்போம்.

புனிதர்களின் வாழ்க்கையை நாம் உற்று நோக்க வேண்டும்:

  • புனித பியட்ரெல்சினா பியோ (Padre Pio): நற்கருணை ஆண்டவரோடு தியானத்தில் ஒன்றித்து, பல மணிநேரங்கள் செபத்தில் மூழ்கியிருப்பார்.
  • கல்கத்தாவின் புனித அன்னை தெரசா: தன் தினசரிப் பணிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவும், பணிகளை முடித்துத் திரும்பிய பின்பாகவும், நற்கருணை நாதரின் முன்பாக ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் அமைதியாக அமர்ந்து செபிப்பார். அவரிடம் சகோதரிகள், "இவ்வளவு கடினமான பணிகளுக்குப் பிறகும் உங்களால் எப்படிச் செபிக்க முடிகிறது?" என்று கேட்டபோது, அன்னை சொன்னார்: "அங்கிருந்துதான் (நற்கருணையிடமிருந்து தான்) என் பணிகளுக்கான அனைத்து ஆற்றலையும் நான் பெற்றுக் கொள்கிறேன்."
  • இவர்களைப் போலப் புனித குவாபர்ட்டினோ போன்ற அநேக புனிதர்கள் நற்கருணையின் உன்னதத்தை உணர்ந்து, அதிலிருந்து ஆன்மீக பலம் பெற்று வாழ்ந்தார்கள்.

அன்பானவர்களே, நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் நற்கருணை நாதரின் உன்னதத்தை உணர்வோம். தகுதியான முறையில் நல்ல ஒப்புரவு அருட்சாதனம் (பாகசங்கீர்த்தனம்) செய்து, நம் பாவங்களை அறிக்கையிட்டு, தூய உள்ளத்தோடு இந்த நற்கருணையை உட்கொள்ளப் பழகுவோம். நம்முடைய வாழ்வை மாற்றி, நற்கருணையின் பிள்ளைகளாக வாழத் தேவையான அருளைத் தருமாறு இறைவனிடம் மன்றாடுவோம். இந்த உன்னதப் பெருவிழாவை நமக்கு அருளிய ஆண்டவருக்கு நன்றி கூறி, அவரது ஆசியையும் அன்பையும் பெற்றுக் கொள்வோம். ஆண்டவரின் திருவுடலும் திருஇரத்தமும் நம் அனைவரையும் எப்போதும் பாதுகாத்து வழிநடத்துவதாக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூன் 2026, 15:51