வெனிசுலாவில் மீண்டும் நில அதிர்வு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 24, புதன்கிழமை வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் 29, திங்கள்கிழமை மேலும் ஒரு வலுவான பிந்தைய நில அதிர்வு பதிவாகியுள்ளது. இதனால் காரகாஸ் நகரில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட இந்த அதிர்வினால் உடனடியான கூடுதல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டை நிலநடுக்கங்களால் ஏறத்தாழ 1,500 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 50,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். ஒவ்வொரு மணிநேரமும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிவதற்கான நம்பிக்கை குறைந்து வருகிற போதிலும், நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான லா குவைராவில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பேரிடர் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் 48 முதல் 72 மணி நேரம் வரை உயிர்களைக் காப்பாற்றும் மீட்புப் பணிகளுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போருக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்கும் சூழல் இருந்தால், அவர்கள் அதற்கும் மேலாக நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 29, திங்களன்று, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனும் தனது ஆன்மீக நெருக்கத்தையும் செபங்களையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, உயிர்களைக் காப்பாற்ற அயராது ஈடுபட்டு வரும் மீட்புப் பணியாளர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் பெருமளவில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சிகளை மட்டுமே சார்ந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, வெனிசுலா அரசின் செயல்பாடுகளை பல தரப்பினர் விமர்சித்துள்ளனர். எனினும், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அனைத்துலக ஒத்துழைப்புடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
உலகெங்கிலும் இருந்து 2,600-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற தேடுதல் நாய்கள் மற்றும் நவீன இயந்திரங்களுடன், உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் பணியிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவும் பணியிலும் இணைந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.