நல்லிணக்கம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் இலங்கைத் திருஅவை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"ஏறக்குறைய முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போருக்குப் (1983-2009) பிறகு, நல்லிணக்கத்தையும் குணப்படுத்துதலையும் ஊக்குவிப்பதில் இலங்கையிலுள்ள கத்தோலிக்க திருஅவை முக்கிய பங்கு வகிக்கிறது" என்று இலங்கையின் தேசிய திருத்தந்தை மறைத்தூதுக் கழக இயக்குநர் அருள்பணி நாயகம் ராய் கிளாரன்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.
போரின் போது தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் என இரு தரப்பினரும் ஆழமாகப் பாதிக்கப்பட்டதாகவும், பல குடும்பங்கள் இன்னும் அதன் வடுக்களை சுமந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். இத்தகைய சூழலில், திருஅவையானது உரையாடல், சந்திப்பு மற்றும் அமைதியை உருவாக்கும் இடமாகத் தொடர்ந்து திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
2.3 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் ஏறத்தாழ 13 இலட்சம் கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள திருஅவையானது, பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட நம்பிக்கையாளர்களை ஒன்றிணைக்கிறது" என்றும் "மேலும், காரித்தாஸ் மற்றும் திருத்தந்தை மறைத்தூதுக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம் நல்லிணக்கத்திற்குத் தீவிரமாக ஆதரவளிக்கிறது" என்றும் அருள்பணி கிளாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் "போருக்குப் பிறகு மக்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது" என்றும், "இது சமூகங்களுக்கு இடையிலான புரிதலை வளர்க்கவும், ஏற்றத்தாழ்வுகளை உடைக்கவும் உதவுவதாக அருள்பணி கிளாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, உண்மை வெளிப்படவும் நீதிநிலைநாட்டப்படவும் திருஅவை தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அருள்பணி கிளாரன்ஸ், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமைதியை நிலைநாட்டவும், பழிவாங்கும் மனப்பான்மை உருவாகாமல் தடுக்கவும் திருஅவை முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள், வேலையின்மை மற்றும் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இயற்கை பேரிடர்களின் தாக்கம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பொருள், உளவியல் மற்றும் ஆன்மீக ஆதரவை திருஅவை தொடர்ந்து வழங்கி வருகிறது. தனது வளமான வரலாறு மற்றும் புனித ஜோசப் வாஸின் சான்று வாழ்வின் மூலம் வலிமையைப் பெறும் திருஅவையானது, இலங்கை மக்களுக்கு நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் எதிர்நோக்கின் அடையாளமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.