தொழில்நுட்பத்தின் நெறிமுறைப் பயன்பாட்டிற்கு தென் சூடான் ஆயர் அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான “மகத்தான மானுடம்” (Magnifica Humanitas) வழங்கும் கருத்துகளை முன்னிறுத்தி, தென் சூடானின் தொம்புரா-யாம்பியோ மறைமாவட்ட ஆயர் எடுவார்டோ ஹீபோரோ குச்சாலா அவர்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் மையத்தில் மனித மாண்பு, அறநெறி மதிப்புகள் மற்றும் பொறுப்புணர்வு இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்பம் பல நன்மைகளை வழங்கினாலும், அது மனிதகுலத்திற்கு சேவை செய்யும் கருவியாகவே இருக்க வேண்டும் என்றும், மனிதனை ஆளும் சக்தியாக மாறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஆயர், பலர் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை விட இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும், உண்மை மற்றும் பொய்யை பகுத்தறியும் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அதிகளவிலான தகவல்களுக்கு ஆளாகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனால், நாம் சிந்திக்கும் திறன் கொண்ட பொறுப்புள்ள தலைவர்களையா உருவாக்குகிறோம், அல்லது தகவல்களை வெறுமனே நுகரும் டிஜிட்டல் அடிமைகளையா உருவாக்குகிறோம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
போரின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் தென் சூடானைப் போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு வலுவான மதிப்பீடுகள், தரமான கல்வி, உண்மையான நட்புறவுகள் மற்றும் நல்ல வழிகாட்டிகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர், பள்ளிகள், திருஅவைகள், அரசுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து பொறுப்பான டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர், “இளைஞர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதல்ல முக்கியம்; அவர்கள் இறைவன் விரும்பும் மனிதர்களாக வளர உதவுகிறோமா என்பதே உண்மையான கேள்வி” என்றும் தெரிவித்துள்ளார்.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.