தேடுதல்

கானரி தீவு கானரி தீவு  (@Vatican Media)

கானரி தீவுகள்: நம்பிக்கையையும் வரவேற்பையும் இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும்

கானரி தீவுகளுக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் திருத்தூதுப் பயணம், அப்பகுதியின் வரவேற்பு, ஒற்றுமை மற்றும் மனிதநேயப் பணிக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தியதாக காரித்தாஸ் தெனெரிஃபே பிரதிநிதி ஹுவான் பெட்ரோ ரிவேரோ கோன்சாலெஸ் தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அண்மைய கானரி தீவுகள் திருத்தூதுப் பயணம், அங்குள்ள திருஅவைக்கும் சமூகத்திற்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக காரித்தாஸ் தெனெரிஃபே அமைப்பின் மறைமாவட்ட பிரதிநிதி ஹுவான் பெட்ரோ ரிவேரோ கோன்சாலெஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணம் ஒரு சாதாரண மேய்ப்புப் பயணமாக மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வரவேற்பு, சந்திப்பு மற்றும் ஒற்றுமையின் நிலமாக கானரி தீவுகளின் தனித்துவமான அழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக உள்ள கானரி தீவுகள் எதிர்கொள்ளும் புலம்பெயர்வு சவால்களுக்கு திருத்தந்தையின் வருகை உலகளாவிய கவனத்தை ஈர்த்தது என்றும் அவர் தெரிவித்தார். தெனெரிஃபே மற்றும் கிரான் கனாரியாவில் புலம்பெயர்ந்தோரை நேரில் சந்தித்த திருத்தந்தை, ஒவ்வொரு எண்ணிக்கையின் பின்னாலும் ஒரு மனித முகம், ஒரு வாழ்க்கைக் கதை, மனித மாண்பு மற்றும் நம்பிக்கை இருக்கிறது என்பதை உலகிற்கு நினைவூட்டினார்.

மேலும், புலம்பெயர்ந்தோரின் துயரங்கள், அச்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, உண்மையான கிறிஸ்தவப் பணி கவனமுடன் கேட்பதிலிருந்தும் இரக்கமுள்ள துணைநிற்றலிலிருந்தும் தொடங்குகிறது என்று எடுத்துரைத்தார்.

“நமது பார்வையை உயர்த்துவோம்” என்ற திருத்தந்தையின் அழைப்பு, எல்லைகளையும் குறுகிய மனப்பான்மைகளையும் கடந்து மனிதர்களை அன்புடனும் நம்பிக்கையுடனும் அணுகுமாறு கானரி தீவுகள் திருஅவைக்கும் உலகத் திருஅவைக்கும் அவர் விட்டுச் சென்ற நிலையான செய்தியாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 12:24