அசெர்ரா மக்களுக்கு நம்பிக்கையூட்டிய திருத்தந்தை அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மே 23, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தெற்கு இத்தாலியின் காம்பானியா மாநிலத்திலுள்ள நெருப்பு நிலம் (Land of Fires) என்று அழைக்கப்படும் அசெர்ரா நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக நச்சுக்கழிவுகளைக் கொட்டுதல் மற்றும் எரிப்பதன் மூலம் பல ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குள்ளான சமூகங்களுக்கு ஆறுதலையும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் அளித்துள்ளார்.
இந்தப் பயணம் குறித்துப் பேசிய காம்பானியாவின் ஜியுலினோவில் உள்ள ஆவே மரியா கிராதியா பிளீனா ஆலயத்தின் அதிபர் தந்தை லூய்கி புகிலீசி அவர்கள், நச்சு மாசுபாட்டின் விளைவுகளால் துன்பப்படும் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவே திருத்தந்தை வருகை புரிந்ததாகக் குறிப்பிட்டார். இப்பகுதி நீண்ட காலமாகத் தீவிர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புற்றுநோய் பாதிப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நெருக்கடிக்குக் காரணமான பேராசை மற்றும் அலட்சியத்தை திருத்தந்தை கடுமையாகக் கண்டித்ததாக அருள்பணி புகிலீசி குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தையின் செய்தி ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் மையமாகக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அருள்பணி புகிலீசி அவர்கள், மேலும் மனித வாழ்வும் மாண்பும் பொருளாதார நலன்களுக்காகவோ அல்லது இலாபத்திற்காகவோ ஒருபோதும் பலிகொடுக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி, வேலையின்மை, போதிய கல்வியின்மை, இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம், மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையிழப்பு போன்ற மறைமுகமான காயங்களையும் இப்பகுதி எதிர்கொள்வதாக அருள்பணி புகிலீசி விளக்கினார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பயணம் இப்பகுதியின் இழந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூன் 23, திங்களன்று, தனது அருள்பணித்துவ வாழ்வின் 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அருள்பணி புகிலீசி, கடவுளிடமும் தாங்கள் சேவை செய்யும் மக்களிடமும் கொண்ட ஆழமான அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டு, அருள்பணியாளர்கள் தங்களின் இறையழைப்பிற்கு ஏற்ப உடனிருத்தல், செவிசாய்த்தல், சேவை மற்றும் தொண்டு ஆகியவற்றை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.