தேடுதல்

அருளாளர் பாவ்லோ மன்னா அருளாளர் பாவ்லோ மன்னா 

திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் தேசிய இயக்குநர்களின் திருப்பயணம்:

2026-ஆம் ஆண்டிற்கான பொதுப் பேரவை கூட்டத்திற்காக உரோமில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாப்பிறை மறைப்பணி கூட்டமைப்பின் தேசிய இயக்குநர்கள், தங்கள் அமைப்பின் நிறுவனர் அருளாளர் பாவ்லோ மன்னாவின் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் இத்தாலியின் டுசென்டா நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

2026 ஆம் ஆண்டிற்கான பொதுப் பேரவை கூட்டத்திற்காக உரோமில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தந்தை  மறைத்தூதுக் கழகத்தின் தேசிய இயக்குநர்கள், அருளாளர் பாவ்லோ மன்னாவின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இத்தாலியின் டுசென்டா நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.

இந்த திருப்பயணத்தின் போது 2005 ஆம் ஆண்டு முதல்  அருளாளர் பாவ்லோ மன்னாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிற்றாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியிலும் பங்கேற்றனர்.

திருப்பலியின் போது மறையுரையாற்றிய, பேராயர் மைக்கேல் அவுடுரோ அவர்கள்,  "நற்செய்தி அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்" என்றும், "திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் திருஅவையின் மறைபரப்புப் பணியில் பங்குபெற வேண்டும்"  என்றும் அருளாளர் மன்னா கண்ட கனவை நினைவு கூர்ந்தார்.

மேலும் போர், பிரிவினை மற்றும் வன்முறை நிறைந்த உலகில், பாப்பிறை மறைப்பணி கூட்டமைப்பிற்கு மக்களிடையே சகோதரத்துவம், ஒன்றிப்பு மற்றும் அமைதியின் உறவுகளை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்த பேராயர் அவுடுரோ அவர்கள், இது கிறிஸ்து மற்றும் தூய மூவொரு இறைவனிடமிருந்து வரும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது என்றும் விளக்கினார்.

மறைபரப்புப் பணி என்பது உத்திகள் அல்லது பரப்புரைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் மாறாக அது தூய மூவொரு இறைவனின் ஒன்றிப்பில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

2001 ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்ட பாவ்லோ மன்னா, அனைத்து அருள்பணியாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே மறைபரப்பு உணர்வை வளர்ப்பதற்காக 1916 ஆம் ஆண்டு பாப்பிறை மறைப்பணி கூட்டமைப்பை நிறுவினார்.

பிற்காலத்தில் திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை முன்கூட்டியே உணர்ந்த அவர், மறைபரப்புப் பகுதிகளில் உள்ளூர் அருள்பணியாளர்களின் உருவாக்கம் மற்றும் அந்தந்த மண் சார்ந்த ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களின் தலைமைத்துவத்தை வலுவாக ஆதரித்தார்.

மறைபரப்புப் பணியை வெறும் நிதி உதவியாக மட்டும் சுருக்குவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அருளாளர் மன்னா அவர்கள், நற்செய்தி அறிவிப்பின் உண்மையான நோக்கம் பொருள் சார்ந்த வளங்களை விட இயேசு கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

பீதேஸ் செய்தி நிறுவனம்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2026, 11:23