தேடுதல்

TOPSHOT-VENEZUELA-EARTHQUAKE-AFTERMATH

நிலநடுக்கத்திற்குப் பிறகும் வெனிசுலாவில் நம்பிக்கையை விதைக்கும் திருஅவை!

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்திற்குப் பிறகும், திருஅவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக மற்றும் ஆன்மீக உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக கராகாஸ் பங்குத்தந்தை லூயிஸ் அன்டோனியோ கார்சியா தாமஸ் தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 29, திங்கள்கிழமை காலை, வெனிசுலாவின் கராகாஸ் நகரில் உள்ள சான் ஹோசே டி ஞாரௌலி பங்குத் திருஅவையின் பங்குத்தந்தை லூயிஸ் அன்டோனியோ கார்சியா தாமஸ் அவர்கள் வழங்கிய பேட்டியின்போது, மேலும் ஒரு சக்திவாய்ந்த பிந்தைய நில அதிர்வு ஏற்பட்டது.

ஜூன் 24, புதனன்று ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லா குவைரா பகுதியில் ஏற்பட்ட சேதம் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை விட மோசமானதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள பங்குத்தந்தை தாமஸ் அவர்கள், கராகாஸ் நகரிலும் பல வீடுகள் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பேரிடர் சூழலிலும் திருஅவை விரைவாக ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள பங்குத்தந்தை தாமஸ் அவர்கள், திருத்தந்தை  அவர்களின் செபங்களும் நெருக்கமும் மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பங்குத் திருஅவையின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், மணி கோபுரமும் இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாக கூறியுள்ள பங்குத்தந்தை தாமஸ் அவர்கள், இருப்பினும், திருஅவை வீதிகள் மற்றும் பொதுத் திடல்களில் திருப்பலிகளையும் செப நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், உலக நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூன் 2026, 14:40