தேடுதல்

2026.06.18  Sacred Heart

இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வடக்கு அரேபிய திருத்தூது நிர்வாகம்

திருத்தூது நிர்வாகத்தின் “தாய் ஆலயம்” என அழைக்கப்படும் திரு இருதய ஆலயம், அண்மையில் திருத்தூது நிர்வாகத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகம் (AVONA), ஜூன் 12 அன்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அமைந்துள்ள திரு இருதய ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி கொண்டாட்டத்தின்போது, இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த திருப்பலிக்கு வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகத் தலைவர் ஆயர் ஆல்டோ பெரார்டி தலைமை தாங்கினார். அவருடன் பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாருக்கான திருத்தந்தையின் தூதர் பேராயர் யூஜின் நியூஜெண்ட் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார். பஹ்ரைன் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விசுவாசிகள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தினர் இதில் பங்கேற்றனர். மேலும் பலர் இணைய வழி நேரடி ஒளிபரப்பின் மூலம் இணைந்தனர்.

இந்த அர்ப்பணிப்பு விழாவிற்குத் தயாராகும் வகையில், திருத்தூது நிர்வாகத்தின் அனைத்துப் பங்குகளிலும் மற்றும் விசுவாசக் குழுமங்களிலும் ஒன்பது நாள் நவநாள் ஜெபங்கள் நடத்தப்பட்டன. திருத்தூது நிர்வாகத்தின் “தாய் ஆலயம்” என அழைக்கப்படும் திரு இருதய ஆலயம், அண்மையில் திருத்தூது நிர்வாகத் திருத்தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் மையமாக அமைந்தது.

தமது மறையுரையில் ஆயர் பெரார்டி அவர்கள், “இயேசுவின் திரு இருதயம் மீட்பின் ஊற்றாகவும், திருஅவையின் வாழ்வின் அடித்தளமாகவும் உள்ளது” என்று எடுத்துரைத்தார். மேலும், திருத்தூது நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள நான்கு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலம், அப்பகுதியில் வாழும் கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

இவ்விழாவின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக, இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கும் சிறப்பு உறுதிமொழி இடம்பெற்றது. இதன் மூலம் விசுவாசிகள் நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்வதற்கான தங்களது அர்ப்பணிப்பை புதுப்பித்தனர்.

தமது பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை அணுகிவரும் பேராயர் நியூஜெண்ட் அவர்கள், விசுவாசிகள் தங்களது முழு நம்பிக்கையையும் இயேசுவின் திரு இருதயத்தில் வைக்குமாறு ஊக்குவித்தார். மேலும், அவர்களது வலிமையும் திருப்பணியும் கிறிஸ்துவில் வேரூன்றியவை என்பதை நினைவூட்டினார்.

இந்தக் கொண்டாட்டம், வடக்கு அரேபியாவில் வாழும் கத்தோலிக்க மக்களின் ஆழமான விசுவாசத்தையும், கிறிஸ்துவின் அன்பின் வழியாக ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மைyaiவளர்க்கும் அவர்களது உறுதியையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

பீதேஸ் செய்தி நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 09:23