நேர்காணல் நேர்காணல்   (©NERKANNAL)

நேர்காணல்

குழந்தைகளின் எளிமை, ஜெப வாழ்க்கை மற்றும் அன்பான சான்று வாழ்வே திருச்சபையின் எதிர்கால நம்பிக்கையாகும். நம் குழந்தைகளை இறைவனின் அன்பை உலகிற்கு எடுத்துச் செல்லும் சிறந்த திருத்தூதர்களாக உருவாக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம். நன்றி.

தொகுப்பாளர்:  அருள்சகோதரி பிரைடா.

இனிய இதயங்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த நிகழ்ச்சியில், திருத்தூது பணியாற்றும் பாலர் சபையின் தோற்றம், அதன் நோக்கம் மற்றும் குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற உள்ளம் குறித்து நமது அருட்தந்தை இருதயராஜ் அவர்கள் அழகாகப் பகிர்ந்து கொண்டார். தொடர்ச்சியாக, இன்று பாலர் சபையின் இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது? குழந்தைகள் எவ்வாறு திருத்தூதுப் பணியில் உருவாக்கப்படுகிறார்கள்? என்பதைக் குறித்து அறிந்துகொள்ள இருக்கிறோம். இதை நம்மோடு பகிர்ந்து கொள்ள மீண்டும் நம் மத்தியில் வந்திருக்கும் அருட்தந்தை இருதயராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மீண்டும் உங்களை இந்த நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நிகழ்ச்சியில், பாலர் சபையின் நோக்கத்தையும், குழந்தைகளின் தூய்மையான உள்ளம் திருஅவைக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அழகாக எடுத்துரைத்தீர்கள். இப்போது, பாலர் சபையின் இயக்கம் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது? அதன் வழியாக குழந்தைகள் எவ்வாறு திருத்தூதுப் பணியில் உருவாக்கப்படுகிறார்கள்?

அருள்பணியாளர்  இருதய ராஜ்

குழந்தைகளுடன் இருக்கும்போது எப்போதும் மனம் மகிழ்ச்சியால் நிரம்பிவிடுகிறது. அவர்களோடு பழகும்போது நம்முடைய வயதையே மறந்துவிடுகிறோம். சோர்வும், கவலைகளும் மறைந்து, நாமும் அவர்களைப் போல குழந்தைகளாக மாறிவிடுகிறோம். அவர்களுடைய சுறுசுறுப்பு, உற்சாகம், கள்ளங்கபடமற்ற அன்பு ஆகியவை நமக்குள் புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. உண்மையில், குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். பாலர் சபையின் சிறப்பும் இதில்தான் இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு உயிரோட்டத்தையும் மகிழ்ச்சியையும் தருவது குழந்தைகள்தான். அதுபோல, ஒரு பங்கில் பல்வேறு பக்திச் சபைகள், பணிக்குழுக்கள், நிர்வாக அமைப்புகள் இருந்தாலும், அவற்றிற்கு புத்துணர்ச்சியையும் எதிர்கால நம்பிக்கையையும் அளிப்பவர்கள் குழந்தைகள்தான். குழந்தைகள் இல்லாத எந்தக் கொண்டாட்டமும் முழுமை பெறாது. அவர்களுடைய பங்கேற்பு ஒவ்வொரு நிகழ்விற்கும் தனித்துவமான அழகையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறது.

அதே நேரத்தில், தங்களுடன் வாழும் குழந்தைகளை மட்டும் அல்லாமல், ஏழைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், துன்புறும் குழந்தைகள் ஆகியோரையும் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கவும், உதவிக்கரம் நீட்டவும் பாலர் சபை குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறது. இதுவே திருத்தூதுப் பணியாற்றும் பாலர் சபையின் முக்கியமான நோக்கமாகும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளை இறைவனின் அன்பை வாழ்ந்து காட்டும் திருத்தூதர்களாக உருவாக்குவதற்காகவே திருச்சபை இந்த இயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் அடிக்கடி வேளாங்கண்ணிக்குச் செல்வது வழக்கம். ஜெபிப்பதற்காக மட்டுமல்ல, ஜெபிக்கும் மக்களை அமைதியாகக் கவனிப்பதற்காகவும் செல்வேன். ஒருமுறை, சுமார் பதினேழு அல்லது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு நிகழ்வைக் கண்டேன். ஒரு குடும்பம் நற்கருணை ஆலயத்திற்குள் வந்தது. அவர்களுடன் ஒரு சிறிய குழந்தையும் இருந்தது. அதன் கையில் ஒரு சிறிய பை இருந்தது. பெற்றோர் முழங்காலிட்டு பக்தியுடன் ஜெபிக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்த அந்தக் குழந்தையும் தன் பையை அருகில் வைத்துவிட்டு, அவர்களைப் போலவே முழங்காலிட்டு அமைதியாக ஜெபிக்க ஆரம்பித்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அந்தக் குழந்தை எந்தச் சலனமும் இல்லாமல், தேவதையைப் போல ஆண்டவரின் முன்னிலையில் அமைதியாக இருந்தது.

அந்தக் காட்சி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆன்மிக மகிழ்ச்சியையும் தந்தது. இன்றுவரை அந்த அனுபவம் என் நற்கருணை பக்தியை மேலும் ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதுதான் குழந்தைகளின் தாக்கம். அவர்களுடைய எளிமை, பக்தி, ஜெப வாழ்க்கை மற்றும் நல்ல முன்மாதிரி, மற்ற குழந்தைகளையும் பெரியவர்களையும் நிச்சயமாகத் தொட்டுப் பாதிக்கிறது. எனவே, திருத்தூது பணியாற்றும் பாலர் சபையின் முதன்மையான நோக்கம், சிறு குழந்தைகளை சான்று வாழ்வு வாழும் கிறிஸ்தவர்களாக உருவாக்கி, அவர்கள் வழியாக நற்செய்தி மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துச் செல்லச் செய்வதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 14:43