நேர்காணல் நேர்காணல்  

நேர்காணல்

திருத்தூது பணியாற்றும் பாலர் சபை என்பது, குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே நற்செய்தி அறிவிக்கும் பொறுப்புணர்வையும், பிற குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும் அமைப்பாகும். 1843 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், முதல் நற்கருணைக்குத் தயாராகும் குழந்தைகள் இணைந்து, ஜெபம், இறைவார்த்தை, திருப்பலி மற்றும் சேவை மனப்பான்மை வழியாக ஆன்மீக வளர்ச்சியைப் பெறுகின்றனர்.

திருத்தூது பணியாற்றும் பாலர் சபை – அறிமுக உரையாடல்

இனிய இதயங்களே, அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். இன்றைய நிகழ்ச்சியில், திருத்தூது பணியாற்றும் பாலர் சபை குறித்து அறிந்து கொள்ள இருக்கிறோம். இதற்காக நம்முடன் இணைந்திருப்பவர் அருள்தந்தை இருதயராஜ் அவர்கள். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 25 ஆண்டுகளாக அருள்பணியாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது தமிழக நற்செய்தி அறிவிப்புப் பணிக்குழுவின் செயலராகவும், திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகத்தின் கீழ் செயல்படும் திருத்தூது பணியாற்றும் பாலர் சபையின் செயலராகவும், தமிழக கிறிஸ்தவ இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அருள்தந்தையே, உங்களை வரவேற்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் பாலர் சபை குறித்து நீங்கள் ஆற்றிய மறையுரையை கேட்டபோது, இந்த அமைப்பைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. முதலில், “பாலர் சபை என்றால் என்ன? என்பதை விளக்க முடியுமா?

அருள்தந்தை இருதயராஜ்:

தமிழக நற்செய்தி அறிவிப்புப் பணிக்குழு, திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகம் மற்றும் திருத்தூது பணியாற்றும் பாலர் சபை ஆகியவற்றின் சார்பாக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய பொறுப்பு. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு திருத்தூதர். எனவே நற்செய்தியை அறிவிக்கும் கடமை குருக்கள், துறவியர் அல்லது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து விசுவாசிகளுக்கும் உரியது. இந்த உண்மையை குழந்தைகளுக்கே சிறுவயதிலிருந்தே உணர்த்தும் அமைப்புதான் திருத்தூது பணியாற்றும் பாலர் சபை.

இதன் வரலாறு 1843 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. ஆயர் சார்லஸ் டி ஃபோர்பின்-ஜான்சன் என்பவரால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த ஏழை, ஆதரவற்ற, கல்வி வசதியற்ற மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு குழந்தை மற்றொரு குழந்தையின் தேவையை உணர்ந்து உதவ முடியும் என்ற உயர்ந்த எண்ணமே இந்த இயக்கத்தின் அடிப்படை.

தொகுப்பாளர்:

மிக அருமையான விளக்கம். பொதுவாக குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், குழந்தைகள் மற்ற குழந்தைகளுக்கே அக்கறையுடன் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது மிகவும் சிறப்பான முயற்சி.

இந்த பாலர் சபையில் எந்த வயதுடைய குழந்தைகள் இணைகிறார்கள்?

அருள்தந்தை இருதயராஜ்:

பொதுவாக, முதல் நற்கருணை பெறத் தயாராகும் குழந்தைகள் இந்த அமைப்பில் இணைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் 8 வயது முதல், சில இடங்களில் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கிறார்கள்.

முதல் நற்கருணை பெறுவது ஒரு முக்கியமான ஆன்மீக அனுபவம். அதற்குத் தயாராகும் காலத்தில் குழந்தைகள் ஜெபிக்க கற்றுக்கொள்கிறார்கள், இறைவார்த்தையை வாசிக்கிறார்கள், திருப்பலியில் பங்கேற்கிறார்கள், ஜெபமாலை சொல்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளோடு வளர்கிறார்கள்.

மேலும், குடும்பத்தின் எல்லையைத் தாண்டி சமூகத்தை அறிந்துகொண்டு, பிறரிடம் அன்பாக நடந்து கொள்ளவும், கேட்கவும், பகிர்ந்து கொள்ளவும், உதவவும் கற்றுக்கொள்கிறார்கள்.

எனது 25 ஆண்டுகால அருள்பணியில் குழந்தைகளுடன் பயணித்த அனுபவம் மிகவும் அருமையான இறை அனுபவமாக உள்ளது. சிறுவயதிலேயே அவர்களிடம் உருவாகும் விசுவாச முதிர்ச்சி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துகிறது.

தொகுப்பாளர்

அருமையான பகிர்வுக்கு நன்றி, அருள்தந்தையே. இந்த முதல் அமர்வில், திருத்தூது பணியாற்றும் பாலர் சபை என்றால் என்ன, அதன் வரலாறு என்ன, அதில் எந்த வயதுடைய குழந்தைகள் பங்கேற்கிறார்கள் என்பதைக் குறித்து தெளிவாக அறிந்து கொண்டோம். அடுத்த அமர்வில், பாலர் சபையின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியில் அதன் பங்களிப்பு குறித்து மேலும் அறிந்து கொள்வோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 12:51