நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
மண்சளக்கட்டை சுவாமிகள், தமது சொல்லாலும் செயலாலும் ஞானியாகப் பலரால் போற்றப்பட்டவர். ஒருமுறை ஒரு பக்தர் அவரிடம் வந்து, “கடவுள் யார்? பக்தன் யார்? அவற்றின் உண்மையான வரையறை என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, "கடவுள் யார், பக்தன் யார் என்பதை நான் முழுமையாக வரையறுக்க முடியாது. ஆனால், யார் கடவுள் அல்ல, யார் உண்மையான பக்தன் அல்ல என்பதை என்னால் கூற முடியும்." என்று பதிலளித்தார்: இதைக் கேட்ட பக்தர் ஆர்வத்துடன், “அதை விளக்குங்கள்” என்றார். அப்போது மண்சளக்கட்டை சுவாமிகள் "‘கடவுளே, இதைக் கொடு, அதைக் கொடு’ என்று ஒருவர் வேண்டும்போது, கொடுக்காதவரை கடவுள் இல்லை என்று நினைப்பவன் உண்மையான பக்தன் அல்ல. அதேபோல், ஏற்கனவே எண்ணற்ற அருள்களைப் பெற்றிருந்தும், திருப்தியடையாமல் தொடர்ந்து ‘இன்னும் இதைக் கொடு, அதைக் கொடு’ என்று நச்சரித்துக் கொண்டிருப்பவனும் உண்மையான பக்தன் அல்ல என்று கூறினார்.
இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகின்றன. கடவுள் நமக்குக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர் கடவுளே. அதேபோல், நமது வேண்டுதல்கள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும், நாம் அவர்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களாகவே இருக்க வேண்டும். உண்மையான பக்தி என்பது இறைவனிடமிருந்து எதையாவது பெறுவதற்காக மட்டுமல்ல; அவர் மீது அன்பும் நன்றியும் நம்பிக்கையும் கொண்டு வாழ்வதாகும். மக்களுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த இறைவன் மட்டுமே வரலாற்றில் என்றும் உயிரோடு வாழ்கிறார். அத்தகைய தியாக அன்பினால்தான் மக்கள் அவரை தலைமுறை தலைமுறையாக நினைத்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.