தேடுதல்

நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  

நெறி காட்டும் ஆளுமைகள்

உயர்ந்த பதவியும் கல்வியும் ஒருவரை பெரியவராக்காது; பணிவும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் தான் உண்மையான பெருமையை அளிக்கின்றன. பணிவோடு செய்யப்படும் சிறிய உதவிகூட பிறரின் இதயத்தைத் தொட்டு, எதிர்பாராத நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தரும்.

அது அமெரிக்காவில் கறுப்பின மக்கள் (நீக்ரோக்கள்) அடிமைகளாக நடத்தப்பட்ட இருண்ட காலம். ஒருநாள், வசதி படைத்த வெள்ளை இனப் பெண்மணி ஒருவர் தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு, அந்த வழியாகச் சென்ற ஒரு கறுப்பின மனிதரைக் கைதட்டி, அதிகாரத் தோரணையில் அழைத்தார். "இங்கே பார், என் வீட்டுத் தோட்டத்தில் கிடக்கும் விறகுகளைப் பிளந்து அடுக்கு, உனக்குரிய கூலியைத் தந்துவிடுகிறேன்" என்று கட்டளையிட்டார். அழைக்கப்பட்ட அந்த மனிதர் மறுவார்த்தை பேசவில்லை; தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதி உடனே வேலையில் இறங்கினார். கோடரியை எடுத்து விறகுகளைச் சீராகப் பிளந்தார், நேர்த்தியாகக் கட்டுகளாகக் கட்டினார், பின்னர் சமையலறையில் கொண்டு போய் வரிசையாக அடுக்கினார். அப்போது, அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமி அங்கு வந்தாள். வேலை செய்துகொண்டிருந்த மனிதரின் முகத்தைப் பார்த்ததும் அவள் பதறிப்போனாள். ஓடிப்போய் தன் எஜமானியிடம், "அம்மா! என்ன காரியம் செய்தீர்கள்? அவரிடம் போயா வேலை வாங்குகிறீர்கள்? அவர் யார் தெரியுமா? புகழ்பெற்ற கல்வி அறிஞர் புக்கர் டி. வாஷிங்டன்! டஸ்கேகி (Tuskegee) கல்வி நிறுவனத்தின் தலைவர்!" என்று அலறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தப் பெண்மணி, ஓடோடி வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

வேலை செய்ததால் உடல் வியர்த்து நின்றிருந்த புக்கர் டி. வாஷிங்டன் புன்னகையோடு சொன்னார்: "அம்மா, இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எப்போதும் அலுவலக நாற்காலியிலேயே அமர்ந்து வேலை செய்யும் எனக்கு, இது போன்ற உடலுழைப்பும் வியர்வையும் உடலுக்கு மிகவும் நல்லது. அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்வது எனக்குக் கிடைத்த பெருமை." அவரது இந்த மாபெரும் பக்குவத்தையும் பணிவையும் கண்டு நெஞ்சம் உருகிய அந்தப் பெண்மணி, தன் சொத்துக்களின் பெரும்பகுதியை அவரது டஸ்கேகி கல்வி நிறுவனத்திற்கே உயிலாக எழுதி வைத்தார். "தினையளவு செய்த உதவி பனையளவாக மாறும்" என்பதும், "பணியுமாம் என்றும் பெருமை" என்ற வள்ளுவரின் வாக்கும் இவருக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! கல்வி தரும் உண்மையான அழகு பணிவு மட்டுமே என்பதை தன் வாழ்வால் நிரூபித்தார் அந்த மாமனிதர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2026, 15:42