VATICAN-ENCYCLICAL-MAGNIFICA HUMANITAS-AI-POPE

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு திருஅவையின் குரல் இன்றியமையாதது!

நவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பாரம்பரிய தொழில்நுட்பங்களிலிருந்து மாறுபட்டவை என்றும், ஏனெனில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவுடனான தங்கள் அனுபவத்தை தீவிரமாக "இணை-உருவாக்கம்" செய்கிறார்கள்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மைக்ரோசாப்ட் ( Microsoft ) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் துறை இயக்குநரும், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான லியோனம் நிறுவனத்தின் நிறுவன இயக்குநருமான டெய்லர் பிளாக் அவர்கள், செயற்கை நுண்ணறிவின் அறநெறிசார் மேம்பாட்டிற்கு மதிப்புமிக்க வழிகாட்டுதலை மாண்புமிகு மனிதநேயம் எனும் முதல் திருத்தூது மடல் மூலம் வழங்கியதற்காக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைப் புகழ்ந்துள்ளார்.

நவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பாரம்பரிய தொழில்நுட்பங்களிலிருந்து மாறுபட்டவை என்றும், ஏனெனில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவுடனான தங்கள் அனுபவத்தை தீவிரமாக "இணை-உருவாக்கம்" செய்கிறார்கள் என்றும்  பிளாக் அவர்கள்  கூறியுள்ளார்.

மேலும் "மனிதர்களைப் பற்றிய உள்ளார்ந்த புரிதல் தொழில்நுட்பத்திற்கு இல்லாததால், மனித நடத்தை மற்றும் தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள மெய்யியல், இறையியல் மற்றும் மதம் ஆகியவற்றிலிருந்து நுட்பமான புரிதல்கள் செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களுக்குத் தேவைப்படுகின்றன" என்றும் பிளாக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு  உருவாக்கும் பதில்களை மக்கள் திறனாய்வுச் சிந்தனையின்றி அப்படியே ஏற்கும் ஆபத்தை திருத்தந்தையின் திருத்தூதுமடல் முன்னிலைப்படுத்துவதாகக் குறிப்பிட்ட பிளாக் அவர்கள், "மதிப்பிடும் திறனும் முடிவெடுக்கும் திறனும் இன்னும் வளர்ந்து வரும் நிலையில் உள்ள குழந்தைகளைப் பொறுத்த வரை இந்தக் கவலை முக்கியமானதாக உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

"இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைப்பதால்  தங்கள் சொந்தக் கருத்துக்களை முழுமையாக உருவாக்கும் முன்பே அவர்களின் சிந்தனை, குரல், அடையாளம் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும்"  என்றும் பிளாக் எச்சரித்துள்ளார்.

முதலீட்டு ரீதியாகப் பார்த்தால், மனித மாண்பை மதித்து மக்கள் உண்மையில் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் நிறுவனங்களே வெற்றிகரமான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது" என்று விவரித்துள்ள பிளாக் அவர்கள்,  "பொறுப்பான செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பிற்கு மனித இயல்பு, அறநெறி மற்றும் அறிவாற்றல் பற்றிய ஆழமான புரிதல் தேவை"  என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் திருஅவைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் பிளாக் அழைப்பு விடுத்துள்ளார்.

"இறையியலாளர்களும் மெய்யியலாளர்களும் சிக்கலான அறநெறி கேள்விகளுக்கு தீர்வு காணவும், செயற்கை நுண்ணறிவு  மனிதகுலத்திற்கு சேவை செய்யும் வகையில் வழிநடத்தவும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களுக்கு உதவ முடியும்" என்றும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

திருஅவைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான உரையாடல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த பிளாக், மத மற்றும் மெய்யியல் கண்ணோட்டங்களை தவிர்ப்பது, மக்களைப் புரிந்துகொண்டு சமூகத்திற்கு உண்மையான நன்மைகளைத் தரும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்று வாதிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஜூன் 2026, 12:30