உயிருள்ள ஜெபமாலை இயக்கம்: 200 ஆண்டுகால ஆன்மீக மற்றும் மறைப்பணிப் பாரம்பரியம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உயிருள்ள ஜெபமாலை இயக்கமும், திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகமும் உலகம் முழுவதும் பரவியுள்ள இரு முக்கிய கத்தோலிக்க இயக்கங்களாகும். இவ்விரண்டின் தோற்றமும் வளர்ச்சியும் பிரான்சின் லியோன் நகரைச் சேர்ந்த பவுலின்-மரி ஜாரிகோவின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை.
உயிருள்ள ஜெபமாலை இயக்கம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் லியோன் உயர் மறைமாவட்டமும் பிரான்ஸின் திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகமும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தின. இதில் திருவிழிப்பு வழிபாடு, திருப்பலி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இத்திருப்பலிக்கு கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே மற்றும் லியோன் பேராயரும், பிரான்ஸின் திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகத்தின் தலைவருமான பேராயர் ஒலிவியே து ஜெர்மே ஆகியோர் தலைமை தாங்கினர்.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் வாழ்ந்த பவுலின் ஜாரிகோ, ஆழ்ந்த இறைநம்பிக்கையுடனும் ஏழைகளின் மீதான அக்கறையுடனும் வளர்ந்தார். தொழிலாளர் மக்களின் வறுமை மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கண்டு மனம் நெகிழ்ந்த அவர், உள்ளூர் சமூகப் பணிகளோடு மட்டுமல்லாமல், சீனா உள்ளிட்ட தொலைதூர நாடுகளின் மறைப்பணிகளுக்கும் ஆதரவு வழங்கினார்.
இறைநம்பிக்கை, மரியன்னை பக்தி, சமூக அக்கறை மற்றும் உலகளாவிய மறைப்பணி ஆர்வம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த பவுலின் ஜாரிகோ, பின்னர் “உயிருள்ள ஜெபமாலை” இயக்கத்தையும் “மறைத்தூதுக் கழகத்தையும்” உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்தார்.
இன்று, 200 ஆண்டுகளைக் கடந்தும், அவரது ஆன்மீக பாரம்பரியம் உலகம் முழுவதும் கத்தோலிக்கர்களை செபம், ஒற்றுமை மற்றும் மறைப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.