தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி  (©Sunday Reflection)

குறள்வழி இறைமொழி

நம் குடும்பங்களில், பணியிடங்களில், சமுதாயத்தில் இந்த நல்ல பண்புகள் வளரவும், மற்றவர்களும் இத்தீய குணங்களை விலக்கிக்கொள்ளும் சூழலை உருவாக்கவும் நாம் முயற்சி செய்வோம்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

தமிழ் மணக்கும் அன்பு நெஞ்சங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

"குறள்வழி இறைமொழி" தொடர் நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பும் நன்றியும் நிறைந்த வாழ்த்துகள். இன்று நாம் திருக்குறளின் "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பான குறளைச் சிந்திக்க இருக்கிறோம். இந்தக் குறள், மனிதன் தவிர்க்க வேண்டிய நான்கு தீய குணங்களையும், வளர்த்துக்கொள்ள வேண்டிய அறநெறியையும் வலியுறுத்துகிறது. திருவள்ளுவர் கூறுகிறார்:

"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்."

அதாவது, பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி வாழ்வதே உண்மையான அறம். முதலாவதாக அழுக்காறு, அதாவது பொறாமை. பிறருடைய வளர்ச்சியையும் நலனையும் கண்டு மனம் வருந்தாமல், அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழக் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக அவா, அதாவது பேராசை. தேவைக்கு அதிகமாக விரும்புவது மனிதனை அமைதியிழக்கச் செய்கிறது. "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று புத்தர் கூறுகிறார். அதேபோல், திருஅவையும் பேராசையை தலைசிறந்த பாவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. மூன்றாவதாக வெகுளி, அதாவது கோபம். கட்டுப்பாடற்ற கோபம் மனித உறவுகளைச் சிதைக்கிறது. சினம் நம்மை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. நான்காவதாக இன்னாச்சொல், அதாவது பிறரைப் புண்படுத்தும் சொற்கள். இனிமையான சொல் உறவுகளை வளர்க்கும்; கடுஞ்சொல் உறவுகளை உடைக்கும்.

இந்த நான்கு தீமைகளும் மனித வரலாற்றின் முதல் கொலையான காயீன்–ஆபேல் நிகழ்விலேயே வெளிப்படுகின்றன. ஆபேலின் மீது காயீன் பொறாமை கொண்டான். அந்தப் பொறாமை பேராசையாக மாறியது. பின்னர் கோபமாக வெடித்தது. இறுதியில், கொலையாக முடிந்தது. அதன்பிறகும் கடவுள், "உன் தம்பி எங்கே?" என்று கேட்டபோது, காயீன், "நான் என்ன என் தம்பிக்குக் காவலாளியா?" என்று பதிலளித்தான். அந்த வார்த்தையும் இன்னாச்சொல்லின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இன்னாச்சொல் என்பது கடுஞ்சொல் மட்டுமல்ல. பொய் பேசுதல், புறங்கூறுதல், பிறரை இழிவுபடுத்திப் பேசுதல், தேவையற்ற பேச்சுகளில் நேரத்தை வீணடித்தல் ஆகியவையும் இன்னாச்சொல்லின் வடிவங்களே. எனவே, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியவற்றை நம் வாழ்விலிருந்து அகற்றி, அறநெறியில் நிலைத்திருக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

நம் குடும்பங்களில், பணியிடங்களில், சமுதாயத்தில் இந்த நல்ல பண்புகள் வளரவும், மற்றவர்களும் இத்தீய குணங்களை விலக்கிக்கொள்ளும் சூழலை உருவாக்கவும் நாம் முயற்சி செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 14:35