தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி 

குறள்வழி இறைமொழி

நற்குணங்களில் உயர்ந்தவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வெளிப்படுத்தும் நீதியான கோபம் உண்மையையும் நீதியையும் நிலைநிறுத்தும் வல்லமையுடையது.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

குறள்வழி இறைமொழித் தொடரில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

இன்று நாம் சிந்திக்கவிருக்கும் திருக்குறள்:

  • "குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
  • கணமேயும் காத்தல் அரிது." (குறள் 29)
  •  

இந்தக் குறளில் திருவள்ளுவர் மிக ஆழமான ஒரு உண்மையை எடுத்துரைக்கிறார். நற்குணங்களிலும் நற்பண்புகளிலும் மலைபோல் உயர்ந்து நிற்கும் மனிதர்கள் பொதுவாக கோபப்பட மாட்டார்கள். அவர்கள் பொறுமை, அன்பு, இரக்கம், பணிவு போன்ற பண்புகளில் நிலைத்திருப்பவர்கள். ஆனால், அத்தகையவர்கள் கோபப்பட வேண்டிய சூழ்நிலை உருவானால், அந்தக் கோபம் ஒரு கணநேரம் மட்டுமே நீடித்தாலும், அதன் தாக்கம் மிகவும் வலிமையானதாக இருக்கும்.

இதற்கு நாம் திருவிவிலியத்தில் இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வைக் காண்கிறோம். எருசலேம் திருக்கோயிலில் வியாபாரம் செய்து ஏழை மக்களைச் சுரண்டியவர்களைக் கண்ட இயேசு, சாட்டையை எடுத்து அவர்களை வெளியேற்றினார். நாணய மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்தார். அப்போது சீடர்கள், "உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடுகிறது" என்ற மறைநூல் வார்த்தையை நினைவுகூர்ந்தனர். இயேசுவின் கோபம் தனிப்பட்ட வெறுப்பினால் அல்ல; நீதிக்காகவும் இறைவனின் மகிமைக்காகவும் எழுந்த கோபமாகும்.

அதேபோல், திருமுழுக்கு அருளப்பர் ஏரோதுவின் தவறுகளைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டியபோது, அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத ஏரோது அவருக்கு எதிராகச் செயல்பட்டான். நற்பண்புடையவர்களின் நீதியான கோபத்தை எதிர்கொள்வது எளிதானதல்ல என்பதை இந்த நிகழ்வுகளும் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தக் குறள் நமக்கு இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது.

முதலாவது, நாமும் நற்குணங்களில் வளர்ந்து, குணத்தில் குன்றுபோல் உயர்ந்து நிற்க வேண்டும். அதற்காக இறைவார்த்தையையும் இறையாட்சியின் மதிப்புகளையும் நம் வாழ்வில் ஆழமாகப் பதித்து, அவற்றின்படி சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். இரண்டாவது, நற்பண்புடையவர்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நாம் வாழ வேண்டும். அநீதி, பொய், சுயநலம் போன்றவற்றைத் தவிர்த்து, உண்மை மற்றும் நீதியின் பாதையில் நடக்க வேண்டும்.

"என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தொண்டராக இருக்கட்டும்; முதல்வராக விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்." என்று இயேசு கூறுகிறார்: பணிவோடும் சேவை மனப்பான்மையோடும் வாழ்கிறவர்களே உண்மையில் குணத்தில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

எனவே, இன்று நாம் இந்தத் திருக்குறளை மீண்டும் ஒருமுறை மனதில் பதிப்போம்:

  • "குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது."
  •  

நாமும் நற்குணங்களில் வளர்ந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அந்த நற்குணங்களில் வளர்வதற்கு உதவுவோம்.

இனிய நாள் வாழ்த்துகள். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 14:23