குறள்வழி இறைமொழி
தமிழ் வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். குறள்வழி இறைமொழி நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும். இன்று அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலிருந்து மிகவும் புகழ்பெற்ற ஒரு திருக்குறளை தியானிக்க இருக்கிறோம்:
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” (குறள் 34)
இந்தக் குறளின் பொருள் என்னவென்றால், ஒருவரின் மனம் களங்கமற்றதாகவும், கள்ளமில்லாததாகவும், கபடமற்றதாகவும் இருந்தால் அதுவே எல்லா அறங்களுக்கும் அடிப்படையாகும். மனம் தூய்மையாக இல்லாவிட்டால், ஒருவர் எவ்வளவு நல்ல செயல்களைச் செய்தாலும், எவ்வளவு நல்ல வார்த்தைகளைப் பேசினாலும், அவற்றின் உண்மையான மதிப்பு குறைந்து விடும். மனம் தூய்மையற்ற நிலையில் வெளிப்படையாக நல்லவராக நடிப்பது வெறும் வெளிவேடமாகவே இருக்கும். மனிதர்களை ஏமாற்ற முடிந்தாலும், இறைவனையும் மனசாட்சியையும் ஏமாற்ற முடியாது. அதனால் முதலில் நம் மனம் செம்மைப்பட வேண்டும்.
இதையே புனித பவுல் அடிகளார் தனது முதல் கொரிந்தியருக்கான திருமுகத்தில் கூறுகிறார்:
“அன்பு எனக்கு இல்லையேல், நான் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும்போன்றவன்.”
(1 கொரிந்தியர் 13:1)
அதாவது, அன்பற்ற செயல்கள் வெறும் சத்தமாகவே இருக்கும்; அவற்றில் உயிரும் அர்த்தமும் இருக்காது. தமிழ் மரபிலும் இதே உண்மை வலியுறுத்தப்படுகிறது:
“மனமது செம்மையானால் மார்க்கம் தேவையில்லை.”
ஏனெனில் மனம் செம்மையாக இருந்தால், நல்ல எண்ணங்களும், நல்ல சொற்களும், நல்ல செயல்களும் இயல்பாகவே பிறக்கும். அதனால்தான் “எண்ணம்போல் வாழ்வு” என்று கூறுகிறார்கள். ஒருவருடைய செயல்களும் சொற்களும் நன்றாக இருந்தாலும், அவற்றின் பின்னால் இருக்கும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் அவை பயனற்றதாகி விடும். இதையே இயேசு ஆண்டவர் நினைவூட்டுகிறார்: “ஆண்டவரே! உமது பெயரால் நாங்கள் இறைவாக்குரைத்தோம்; உமது பெயரால் பல செயல்களைச் செய்தோம்” என்று சிலர் கூறும்போது,
“நான் உங்களை அறியேன்; என்னை விட்டு அகன்றுபோங்கள்” என்று அவர் பதிலளிக்கிறார்.
ஏன் இவ்வாறு சொல்கிறார்? வெளிப்படையான செயல்கள் மட்டுமல்ல, அவற்றின் பின்னால் இருக்கும் மனநிலையையும் இறைவன் பார்க்கிறார். மனம் நேர்மையற்றதாக இருந்தால், வெளிப்புற நற்செயல்கள் மட்டும் போதாது. இதைத்தான் நாம் யோசேப்பின் வாழ்க்கையிலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டின் யோசேப்பாக இருந்தாலும், புதிய ஏற்பாட்டின் புனித யோசேப்பாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையின் அடித்தளம் மாசற்ற மனமும் நேர்மையும் தான். இறைவன் மனிதனிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? மீக்கா இறைவாக்கினர் கூறுகிறார்:
“நீதி செய்யவும், இரக்கத்தை விரும்பவும், உன் கடவுளின் முன்னிலையில் தாழ்மையோடு நடக்கவும்.” இதுவே இறைவனுக்குப் பிரியமானது.
அன்பிற்குரியவர்களே, இன்று நாம் ஒரு உறுதி எடுத்துக்கொள்வோம். நமது மனதை தூய்மைப்படுத்த முயற்சி செய்வோம். கள்ளம், பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றை அகற்றி, நேர்மை, அன்பு, இரக்கம் நிறைந்த மனதை வளர்த்துக்கொள்வோம்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” மனம் தூய்மையாக இருந்தால், மற்ற எல்லா அறங்களும் அதிலிருந்து பிறக்கும். மீண்டும் குரல்வழி இறைமொழி நிகழ்ச்சியில் சந்திப்போம். அதுவரை இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.