கதைகள் ஆயிரம்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
ஒரு வியாபாரி, கூடையில் நிறைய புழுக்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சிட்டுக்குருவி. அந்தப் புழுக்களைப் பார்த்ததும் அதற்கும் ஆசை வந்தது. ஆனால், கையில் காசு இல்லை. நாக்கில் எச்சில் ஊறியது. அது வியாபாரியிடம் சென்று,"வியாபாரியே! எனக்கு ஒரு புழு கொடுங்கள்," என்றது. வியாபாரி கேட்டான்:"அதற்குப் பதிலாக நீ என்ன தருவாய்?" சிட்டுக்குருவி சொன்னது:"என் ஒரு சிறகிறகைத் தருகிறேன். எனக்கு ஒரு புழு கொடுங்கள்." ஒரு இறகைக் கொடுத்தது. ஒரு புழுவைப் பெற்றது.அதைச் சுவைத்துச் சாப்பிட்டது. "ஆஹா...என்ன சுவை!" மீண்டும் ஆசை வந்தது. மற்றொரு இறகைக் கொடுத்தது. மற்றொரு புழுவை வாங்கியது. மீண்டும் சாப்பிட்டது. "ஆகா... இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்..." இப்படியே ஒவ்வொரு புழுவுக்காகவும் ஒரு இறகைத் தந்தது. ஒவ்வொரு இறகையும் இழந்தபோதும், அந்தச் சுவைக்காகவே தொடர்ந்து புழுக்களை வாங்கிச் சாப்பிட்டது.இறுதியில் அதன் சிறிய வயிறு நிரம்பிவிட்டது. "அப்பாடா!" என்று சொல்லிக்கொண்டு பறக்க முயன்றது. சிறகை விரித்தது. ஆனால்... பறக்க முடியவில்லை. ஏனென்றால், அதன் சிறகுகளில் இறகே இல்லை! அந்தப் பரிதாபமான நிலையில் தரையில் நின்றது. அதைப் பார்த்த மற்ற பறவைகள் துரத்தின. கொத்தின. மீண்டும் மீண்டும் கொத்தின. இறுதியில் அந்தச் சிட்டுக்குருவி உயிரிழந்தது. புழுவின் சுவைக்காக தனது சிறகுகளை இழந்த அந்தச் சிட்டுக்குருவி, இறுதியில் புழுவோடு புழுவாகிப் போனது.
அன்பானவர்களே, நம் வாழ்க்கையும் பல நேரங்களில் இப்படித்தான். சின்னச் சின்ன ஆசைகள்..."இதில் என்ன தவறு?" என்று தொடங்கும் ஆசைகள்... பின்னர் நம் சுதந்திரத்தையே பறித்துவிடுகின்றன.அடிமைத்தனத்தின் முதல் எழுத்து ஆசைதான். சிறிய ஆசைகளை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், அவை நம் சிறகுகளையே வெட்டிவிடும். இன்று ஒரு கூட்டம், "எதைச் சாப்பிடுவது?" என்று தெரியாமல் அலைகிறது. மற்றொரு கூட்டம், "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்று பசியோடு அலைகிறது. ருசிக்காக வாழ்பவன், வாழ்க்கையின் அர்த்தத்தை இழக்கிறான். பசிக்காக உண்பவன் மட்டுமே உணவின் உண்மையான மதிப்பை உணர முடியும்; ருசிக்காக உண்பவனால் அதை ஒருபோதும் உணர முடியாது. ஆசைகளுக்கு நாம் எஜமானர்களாக இருக்க வேண்டும்; ஆசைகள் நமக்கு எஜமானர்களாக மாறிவிடக் கூடாது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.