காசாவில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் எருசலேம் திருஅவைத் தலைவர்கள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 22, திங்களன்று, எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலஸ் மற்றும் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை பியர்பத்திஸ்தா பித்சபாலா ஆகியோர், போரின் பேரழிவுகரமான விளைவுகளால் துன்பப்படும் மக்களுக்கு ஆன்மீக ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்க காசாவிற்கு ஒரு மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்களுடன் மால்டாவின் இறையாண்மை கொண்ட இராணுவத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் பிளோட்ஸ் மற்றும் பன்னாட்டு மனித உரிமை அமைப்பான மால்டேசர் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.
"இந்தப் பயணம் கிறிஸ்தவ சமூகம் மற்றும் காசாவில் வசிப்பவர்கள் தொடர்ந்து கடுமையான மனிதாபிமான துன்பங்கள், பயம், இழப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையை அனுபவித்து வரும் சூழலில் அவர்கள் மீதான திருஅவையின் மேய்ப்புப்பணி பொறுப்பை பிரதிபலிக்கிறது" என்று எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை தெரிவித்துள்ளார்.
செபம், நெருக்கமான உடனிருப்பு மற்றும் மேய்ப்புப் பணியின் வழியாக, தற்போதைய மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், இரக்கம் மற்றும் புதிய நம்பிக்கையை வழங்க திருஅவைத் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
தங்கள் பயணத்தின் போது, அவர்கள் அருள்பணியாளர்கள், துறவற சமூகங்கள், கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பணி நலவாழ்வு, மனிதாபிமான உதவி மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பதில் திருஅவைகளின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
திருக்குடும்பப் பங்கில் திரண்டிருந்த பங்கு மக்களும் உள்ளூர் மக்களும் இரு திருஅவைத் தலைவர்களையும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். காசாவின் நிலைமை இன்னும் சவாலாக இருந்தபோதிலும், அப்பகுதி திருஅவையின் கவனத்தின் மையமாகவே உள்ளது என்று கர்தினால் பித்சபாலா குறிப்பிட்டார்.
அவர்களது இந்தப் பயணம் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து இடம்பெறுகிறது, இதில் போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருஅவை சார்ந்த வருகையும் அடங்கும், அப்போது அவர்கள் புனித பூமி முழுவதும் அமைதி, குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்திற்காக கூட்டாக அழைப்பு விடுத்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.