இன்றைய புனிதர்
அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில்
திரு. பிலோமி அலெக்ஸ்
திருஅவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகப் போற்றப்படும் அலெக்ஸாந்திரியாவின் புனித சிரில், கி.பி. 376 ஆம் ஆண்டு எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியா நகரில் பிறந்தார். அவரது உறவினரும் அந்நகரின் மறைத்தந்தையுமான தியோபிலஸ் (Theophilus) அவர்களால் குருத்துவத் திருநிலைக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். கி.பி. 412 ஆம் ஆண்டு தியோபிலஸ் மறைந்ததைத் தொடர்ந்து, புனித சிரில் அலெக்ஸாந்திரியாவின் மறைத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தனது பணிக்காலத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட யூதர்களை அலெக்ஸாந்திரியா நகரிலிருந்து வெளியேற்றினார். அந்தக் காலத்தில், ஆண்டவர் இயேசு மனித இயல்பை மட்டுமே கொண்டவர்; அவரிடம் இறையியல்பு இல்லை என்று போதித்த கான்ஸ்டான்டிநோபிளின் ஆயர் நெஸ்தோரியஸ் (Nestorius) என்பவரின் தவறான கொள்கையை புனித சிரில் உறுதியாக எதிர்த்தார். இதற்காக அவர் திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் அவர்களைச் சந்தித்து, ஒரு திருச்சங்கத்தைக் கூட்ட ஏற்பாடு செய்தார்.
அதன்படி, கி.பி. 431 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று எபேசு நகரில் நடைபெற்ற திருச்சங்கம், நெஸ்தோரியசின் போதனையைக் கண்டித்து, இயேசு கிறிஸ்து முழுமையான இறையியல்பும் முழுமையான மனித இயல்பும் உடையவர் என்று திருஅவையின் விசுவாசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, நெஸ்தோரியசின் ஆதரவாளர்களுக்கும் புனித சிரிலின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பேரரசர் இரண்டாம் தியோதோசியஸ் அவரை சிறையில் அடைத்தார். பின்னர் திருத்தந்தையின் பிரதிநிதிகள் உண்மையை விளக்கியதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். புனித சிரில் அவர்கள் கி.பி. 444 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று இறைவனடி சேர்ந்தார். நெஸ்தோரியசின் தவறான போதனைகளை எதிர்த்து, கிறிஸ்துவின் உண்மையான இறைமனித இயல்பை உறுதியாகப் பாதுகாத்த அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில், திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்கள் 1882 ஆம் ஆண்டு அவரை திருஅவையின் மறைவல்லுநராக அறிவித்தார்.
இன்று திருஅவை அலெக்ஸாந்திரியாவின் புனித சிரிலின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. அவரது பரிந்துரையின் வழியாக, நம் அருகிலுள்ள அனைவரின் ஆன்மீக மற்றும் மனித முன்னேற்றத்திற்காக இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.