இன்றைய புனிதர் இன்றைய புனிதர் 

இன்றைய புனிதர்

புனித ஜோஸ் மாரியா எஸ்க்ரிவா தே பாலக்கரைப் போல, நமது அன்றாடக் கடமைகளையே இறைப்பணியாக மாற்றி, அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பிறருக்குச் சேவை செய்வோம். அவரது பரிந்துரையால், நம் வாழ்வை இறைவனுக்குப் பிரியமான புனித வாழ்வாக மாற்ற இறையருளை மன்றாடுவோம்.

புனித ஜோஸ் மாரியா எஸ்க்ரிவா தே பாலக்கர்

திரு. பிலோமி அலெக்ஸ்      

புனித ஜோஸ் மாரியா எஸ்க்ரிவா தே பாலக்கர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் எஸ்க்ரிவா மற்றும் டோலோரெஸ் அல்பாஸ் தம்பதியருக்கு 1902ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலேயே உடன்பிறந்த சகோதரிகளின் மறைவு மற்றும் தந்தையின் வணிக இழப்பு போன்ற பல துன்பங்களை அவர் அனுபவித்தார். இத்துயரங்கள் அவரது இறைநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தின. தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர், 1925ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1927ஆம் ஆண்டு சட்டப் படிப்பைத் தொடருவதற்காக மாட்ரிட் நகருக்குச் சென்ற அவர், அங்குள்ள ஏழைகள், நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சேவை செய்து, அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தார். அவரது ஆன்மிக வழிகாட்டுதலால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள், ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்தனர். இதன் விளைவாக, 1928ஆம் ஆண்டு ஓபுஸ் டெய் (Opus Dei) எனப்படும் "இறைப்பணி" அமைப்பை நிறுவினார். அன்றாட வாழ்க்கையையும் தொழிலையும் புனிதப்படுத்தி, உலகின் நடுவே இறைஅழைப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே இவ்வமைப்பின் நோக்கமாக இருந்தது.

திருஅவையிலும் சமூகத்திலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்திய அவர், பெண்களையும் ஓபுஸ் டெய் அமைப்பில் இணைத்து, இறைப்பணியில் ஈடுபடுத்தினார். ஒருநாள் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, குருக்களுக்கென தனிப்பட்ட ஒரு சபையை உருவாக்க வேண்டும் என்ற இறையழைப்பை உணர்ந்தார். அதன்படி, ஓபுஸ் டெய் அமைப்பில் இருந்த சில பொதுநிலையினரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குருத்துவ அருட்பொழிவு வழங்கி, குருக்களின் சபையை உருவாக்கினார். தாம் நிறுவிய ஓபுஸ் டெய் அமைப்பை உலகின் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தி, இறையன்பையும் நற்செய்தியையும் பரப்பிய புனித ஜோஸ் மாரியா எஸ்க்ரிவா தே பாலக்கர், 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல சமூகநல நிறுவனங்களை உருவாக்கி, மனித முன்னேற்றத்திற்கும் திருஅவையின் வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவரை, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 2002ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள் புனிதராக உயர்த்தினார்.

இன்று புனித ஜோஸ் மாரியா எஸ்க்ரிவா தே பாலக்கரின் திருநாளைக் கொண்டாடும் நாம், அன்றாட வாழ்வையே புனிதமாக வாழவும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்குச் சேவை செய்யவும், அனைவரும் இறையன்பில் வளரவும் அவரது பரிந்துரையை நாடி இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 14:50