இன்றைய புனிதர்
புனித ரொமுவால்டு
திரு. பிலோமி அலெக்ஸ்
இத்தாலி நாட்டின் ராவின்னா பகுதியில், செர்ஜியுஸ் மற்றும் சாரா தம்பதியருக்கு கிபி 950 ஆம் ஆண்டு ரொமுவால்டு பிறந்தார். இளமையிலேயே, தனது தந்தை பகைவரைக் கொலை செய்த நிகழ்வை நேரில் கண்ட அவர், அந்தப் பாவத்திற்காக மனம் வருந்தி, தன் தந்தைக்கு இறைமன்னிப்பு கிடைக்க வேண்டுமென்று 40 நாட்கள் கடுமையான தவமும் இறைவேண்டலும் மேற்கொண்டார். பின்னர் தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணிக்க விரும்பிய ரொமுவால்டு, புனித அப்பொலினாரேயின் துறவுமடத்தில் இணைந்து துறவற வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், ஆழமான ஆன்மீக வாழ்விற்கான அழைப்பை உணர்ந்த அவர், வெனிஸ் நகருக்குச் சென்று மாரினுஸ் என்ற புனிதத் துறவியின் வழிகாட்டுதலின் கீழ் தன் துறவற வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டார்.
வெனிஸ் மக்களிடையே நற்செய்தியை அறிவித்த அவர், புதிய துறவுமடங்களையும் நிறுவி, பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக விளங்கினார். அவரது புனிதமான வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட அவரது தந்தை செர்ஜியுஸும் பின்னர் துறவற வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கும் தேவையான ஆன்மீக வழிகாட்டுதலை ரொமுவால்டு வழங்கினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலி முழுவதும் நற்செய்தியை அறிவித்து, பல துறவுமடங்களை நிறுவிய புனித ரொமுவால்டு, கிபி 1027 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் இறைவேண்டல் செய்த பலர் அருள்களையும் புதுமைகளையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருத்தந்தை பதிமூன்றாம் கிரெகோரி அவர்கள் கிபி 1582 ஆம் ஆண்டு அவரைப் புனிதராக அறிவித்தார்.
சிந்தனை:
புனித ரொமுவால்டைப் போல, நமது பெற்றோருக்காகவும், அவர்கள் செய்த தவறுகளை இறைவன் மன்னித்து அவர்களை ஆசீர்வதிக்கவும் நாம் இறைவேண்டல் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.