திருத்தந்தையின் AI மடல்: அறநெறி வழிகாட்டியாக ஏற்கும் இந்திய ஆயர்கள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான மாண்புமிகு மனிதநேயம் (Magnifica humanitas) என்ற மடலை மனமகிழ்வுடன் வரவேற்றுள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI), "செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கியமான அறநெறி வழிகாட்டியாக இந்த மடல் அமையும்" என்று விவரித்துள்ளது.
இந்தத் திருத்தூது மடல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வு, கடுமையான கண்காணிப்பு மற்றும் அதிகாரக் குவிப்பு உள்ளிட்ட முக்கிய கவலைகளை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் "செயற்கை நுண்ணறிவு கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், இந்தப் பிரச்சினைகள் தீவிரமடையக்கூடும்" என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
"கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மாண்பிற்கும் நீதிக்கும் பொதுநலத்திற்கும் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ள திருத்தூது மடலின் பகுதியை மிகக் குறிப்பாகப் பாராட்டப்பட்டியுள்ளனர்.
"இந்தத் திருத்தூது மடல் கத்தோலிக்க சமூகக் கோட்பாட்டிற்கு ஒரு மதிப்புமிக்க பங்களிப்பு" என்று விவரித்துள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள், இது 'ரேரும் நோவாரும்' (Rerum novarum) திருத்தூது மடலின் தொடர்ச்சியாக விளங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் அறநெறித் தாக்கங்களை கத்தோலிக்கர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில், பங்குகள், பள்ளிகள் மற்றும் அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சிகளில் இதைப் பயிற்றுவிக்க இந்திய ஆயர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவரான கர்தினால் அந்தோணி பூலா அவர்கள் "விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் நிறைந்த இந்த காலத்தில் வெளியான இந்தத் திருத்தூது மடலை "ஒரு தெளிவான அறநெறி திசைகாட்டி" என்று அழைத்துள்ளார்.
மேலும் "தொழில்நுட்பமானது ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், விளிம்புநிலை சமூகங்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்யுமாறு கத்தோலிக்கர்களையும் நற்பண்பு கொண்ட அனைவரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் திருஅவையானது, தலித்துகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் மீதான செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை ஆய்வு செய்து வரும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவானது அறநெறிக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படும்போது அணைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதை அங்கீகரிக்கிறது.
செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் ஒழுங்குபடுத்தவும், வேலைவாய்ப்புகள், மனித மாண்பு மற்றும் பொதுநலத்தைப் பாதுகாக்கவும் விடுக்கப்பட்ட அழைப்பிற்காக, இந்தத் திருத்தூது மடல் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஊடக கவனத்தைப் பெற்றுள்ளதாகவும் ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.