ஹாங்காங் மற்றும் மக்காவ் திருஅவைகளுக்கு மறைப்பணி ஆர்வத்தைப் புதுப்பிக்க திருத்தந்தை அழைப்பு!

அத் லிமினா வருகையையொட்டி ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை, திருஅவை தனது வரலாற்றை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், மறைப்பணி உணர்வையும் திருத்தூது ஆர்வத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருஅவை தனது கடந்த காலப் பயணத்தை நினைவுபடுத்துவதுவதோடு நில்லாமல், தனது மறைப்பணி உணர்வையும் திருத்தூது ஆர்வத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆயர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்தித்து, தங்கள் மறைமாவட்டங்களின் நிலவரம் பற்றி அறிவிக்கும் அத் லிமினா நிகழ்வையொட்டி, ஜூன்16, செவ்வாயன்று, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு திருத்தந்தை தெரிவித்தார்

உலகத் திருஅவையுடன் கொண்டுள்ள இறைஒன்றிப்பை வலுப்படுத்தி, நற்செய்தி அறிவிக்கும் பணியில் புதிய உற்சாகத்தைப் பெற்றதாக ஆயர்கள் தெரிவித்தனர்.

மக்காவ் ஆயர் ஸ்டீபன் லீ அவர்கள், இந்த யூபிலி ஆண்டு ஆசியா முழுவதும் நற்செய்தியைப் பரப்பிய தலைமுறை தலைமுறையான மறைப்பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் காலம் என்று வலியுறுத்தினார்.

ஆண்டு விழாவின் கருப்பொருளாகிய “நம்பிக்கை” குறித்து பேசிய ஹாங்காங் துணை ஆயர் ஜோசப் ஹா அவர்கள், நற்செய்தியால் பெற்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் பொறுப்பு கத்தோலிக்கர்களுக்கு உண்டு என்று வலியுறுத்தினார்.

"உரோமிற்கான இந்தப் திருப்பயணம் உலகளாவிய திருஅவையுடனான மறைமாவட்டங்களின் தொடர்பை வலுப்படுத்தும் ஒரு பொன்னான அனுபவம்" என்றும் அவர் விவரித்தார்.

"ஒன்றாகக் நுண்ணறிந்து ஒன்றாக நடப்போம்" என பொருள்படும் சீன முதுமொழியான 'கோங் யி டோங் ஜிங்' (gong yi tong xing)  என்பதன் மூலம்  கூட்டொருங்கியக்கப் பார்வையில் இந்தப் பயணத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்த கர்தினால் ஸ்டீபன் சௌ அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை ஒரு சிறந்த செவிமடுப்பாளர் என்று பாராட்டினார்.

"திருத்தந்தை உரையாடலுக்கு எப்போதும் திறந்த மனநிலையுடன் இருப்பது கூட்டொரு ங்கியக்க முறைமையின் உண்மையான ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது" என்று குறிப் பிட்ட கர்தினால் ஸ்டீபன் சௌ அவர்கள், "இது திருஅவைக்குள் ஒருவருக்கொருவர் செவிமடுத்தல், பகுத்தறிதல் மற்றும் பகிரப்பட்ட பணியை செயல்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்றும் கூறினார்.

மக்காவ் மறைமாவட்டம் 450 ஆண்டுகால வரலாற்றையும், ஹாங்காங் மறைமாவட்டம் தனது 80ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் இவ்வேளையில், திருத்தந்தையுடனான இந்த சந்திப்பு இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூன் 2026, 12:28